ஓசூர் பாகலூர் சாலை, சமத்துவபுரம் வரை விரிவு படுத்தப்படாமல் இருப்பது ஏன்? அரசியல் தலையீடுகளால் தடைபட்டு நிற்கிறதா? அல்லது, நீதிமன்ற வழக்குகள் தடுக்கின்றனவா? அல்லது, அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா? அல்லது, ஒப்பந்தம் எடுத்தவர் கைவிட்டு விட்டு ஓடி விட்டாரா? அடிப்படையில் என்னதான் நடக்கிறது? தெரிந்து கொள்ளலாம், வாங்க!
தேசிய நெடுஞ்சாலை 44, கன்னியாகுமரியில் துவங்கி, ஓசூர் வழியாக, காஷ்மீரின் Srinagar வரை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை 648, இதன் பழைய எண் 207, ஓசூரில் துவங்கி, கர்நாடக மாநிலம் சர்ஜாபுரம், ஒசக்கோட்டை, தேவனஹள்ளி, தொட்டபெல்லாபூர், வழியாகச் சென்று, தபஸ்பேட்டையில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 139.18 கிலோமீட்டர். இதில், 122.38 கிலோமீட்டர் நீளம், கர்நாடகாவில் பயணிக்கிறது. மீதமுள்ள 16.8 கிலோமீட்டர் தமிழ்நாடு பகுதியில் பயணிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் 44 மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 648 ஆகியவற்றிற்கு, ஓசூர் பேருந்து நிலையம் எதிரே, சந்திப்பு புள்ளியாக திகழ்வதால், அகலப்படுத்தப்படாமல், நகர்புறத்தில் அமைந்துள்ள மூன்று கிலோமீட்டர் பகுதி, கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து, சரக்குகளை ஏற்றி வரும் பெரும்பாலான வண்டிகள், இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இது தவிர்த்து, குடியிருப்பு பகுதி மக்களும், பள்ளி கல்லூரிகள் மற்றும் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியவர்களும், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு பகுதியில் அமைந்துள்ள, 16.8 கிலோமீட்டர், சுமார் 13.8 கிலோமீட்டர் நீளத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்து விட்டது. அதாவது, ஓசூர் சமத்துவபுரம் தாண்டிய பின், சாலை அகலமான சாலையாக அமைந்துள்ளது. சமத்துவபுரம் முதல் ஓசூர் பேருந்து நிலையம் அருகில் வரை உள்ள, மீதமுள்ள 3 கிலோமீட்டர் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
--
இந்த மூன்று கிலோ மீட்டர் அகலப்படுத்தாமல் விடப்பட்டுள்ளதால், மேலும் இது வேகமாக வளர்ந்து வரும் நகர்புறத்தில் இடம் பெற்றுள்ளதால், காலை மாலை என எல்லா நேரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படுகிறது.
பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பலமுறை ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை துறையிடம், சாலையை விரைவாக அகலப்படுத்தி தரும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த சாலையின் விரிவாக்க பணி மேற்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து பல்வேறு யூகங்களும், புரளிகளும், பொது மக்களிடையே பரவி வருகிறது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்திகளாகவும் வெளியிட்டு விட்டன. ஆனால் இதுவரை, சாலையை சீரமைக்கும் பணியோ அல்லது அகலப்படுத்தும் பணியோ, ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை துறையினரால் மேற்கொள்ளப்படவில்லை.
---
தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும், இந்த சாலை குறித்து நன்கறிந்த பொறியாளர் ஒருவரிடம் விணவிய போது, தனது பெயரை குறிப்பிட வேண்டாம் எனக் கூறி சில தகவல்களை ஓசூர் ஆன்லைனிடம் பகிர்ந்து கொண்டார்.
அவரின் கூற்றின்படி, இந்த மூன்று கிலோமீட்டர் அகலப்படுத்துவதற்கான திட்டத்தை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை அறிவித்து சாலையை கையகப்படுத்திக் கொண்டது.
அரசின் வழிமுறைகளின் படி, சாலை கையகப்படுத்தப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு தான், அதில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். அதன்படி, இப்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதனால், இனி அகலப்படுத்தும் பணி விரைவு படுத்தப்படும் என தெரிவித்தார்.
----
மேற்கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ள, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை துறையின், உதவி கோட்ட பொறியாளர், திருமதி பத்மாவதி அவர்களிடம், இந்த மூன்று கிலோமீட்டர் பகுதி ஏன் கைவிடப்பட்டுள்ளது என ஓசூர் ஆன்லைன் சார்பில் வினவிய போது, "அகலப்படுத்தும் பணிக்கான மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, அதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு கள ஆய்வு செய்து, சாலை எப்படி அமைய வேண்டும் மற்றும் எவ்வளவு செலவாகும் என்பதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுவரை, ஆய்வுகள் முடிந்து, சாலை அமைப்பதற்கான வரைவு திட்டம் கிடைக்கப் பெற்றுள்ளது. இனி, செலவினங்கள் குறித்த திட்டம் வகுக்கப்பட வேண்டும். இவை இரண்டும் கிடைத்தபின், டெல்லியில் உள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் RO அலுவலகத்தில் ஒப்புதல் பெறப்படும். அதன் பின்னர், திட்டமிடப்பட்டுள்ள சாலையின் வழியில் அமைந்துள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அத்தகைய அறிவிப்புகளின் மீது, வழக்குகள் தொடுக்கப்பட்டால், அவை தீர்க்கப்பட்டு, சாலை பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கோரப்படும்." என தெரிவித்தார்.
இந்த தகவல்கள் திரட்டிய நாம், சாலை விரிவாக்க பணிகள் குறித்து நன்கறிந்த தன்னார்வலர் ஒருவரிடம் வினவியோ போது, "பாகலூர் சாலையின், இந்த மூன்று கிலோமீட்டர் விரிவாக்க பணியை பொருத்தவரை, இன்னும் குறைந்தது ஓராண்டுகளுக்கு பின், அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார். மேலும் கருத்து கூறிய அவர் "பண ஒதுக்கீடு செய்து, கட்டிடங்கள் அகற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அந்த அறிவிப்பின் மீது வழக்குகள் தொடர்ந்தால், அதில் தீர்வு கண்டு, சாலை நிறைவடைவதற்கு, குறைந்தது, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும்" என கருத்து தெரிவித்தார்.
--
மற்றுமொரு தன்னார்வலரிடம், இதுகுறித்து விணவியபோது, அவர், "STRR சாலை பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம். S T R R சாலைக்கான பணி நிறைவடைந்தால், பாகலூர் சாலையை பயன்படுத்தும் பெரும்பாலான லாரிகள், மற்றும் விரைவாக சர்ஜாபுரம் பகுதியைச் சென்றடைய விரும்பும் மக்கள், இந்த சாலையை தவிர்த்து விட்டு, S T R R சாலையை பயன்படுத்த துவங்குவர். அப்போது, இந்தப் பகுதியில், லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்" என குறிப்பிட்டார். ---
இதற்கிடையே, குண்டும் குழியுமான சாலை செப்பனிடும் பணி விரைவில் நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கூற்றின் படி, ஓசூர் பாகலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் மக்கள், முதற்கட்ட தீர்வு காண்பதற்கு, மேற்கொண்டு ஓரிரு ஆண்டுகள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஓசூர் online செய்திகளுக்காக தமிழ்ச்செல்வன். ஓசூர் செய்திகளை அறிந்து கொள்ள, ஓசூர் online.com பயன்படுத்துங்கள்.








