ஓசூர் அருகே, அரசின் சேவையை பாராட்டி, மக்கள் விழா எடுத்துக் கொண்டாட்டம்! சேவைகளை பெறும் பொழுது, அதை பாராட்டுவதற்கும் ஒரு மனம் வேண்டும்! அரசின் சேவைகளில் குறைகளை மட்டுமே கண்டறியும் மக்களுக்கு நடுவே, அரசு வழங்கும் சேவையை பாராட்டி, அரசு ஊழியர்களுக்கு விருந்தளித்து, மேளதாளங்களுடன் விழா எடுத்தனர், ஓசூரை அடுத்த தேன்கனிகோட்டை அருகே உள்ள சாலிவாரம் ஊர் மக்கள்.
ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சாலிவாரம் ஊருக்கு தமிழக அரசின் மூலம் 41 ஆம் எண் நகர பேருந்து மற்றும் கர்நாடக மாநில அரசின் மூலம் பெங்களூருவில் இருந்து 2 கர்நாடக மாநில அரசு பேருந்துகள் என மொத்தம் 3 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த அரசு பேருந்துகளின் சேவைகளை பாராட்டி, ஊர் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை விழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.
அந்த வகையில் சாலிவாரம் கிராமத்தில் தமிழக கர்நாடக மாநிலத்திலிருந்து இயக்கப்படும் மூன்று அரசு பேருந்துகளின் சேவையை பாராட்டி ஆயுத பூஜை விழா நடைபெற்றது. 3 பேருந்துகளையும் கழுவி தூய்மைப்படுத்திய ஊர் மக்கள் வாழை மரங்கள் மற்றும் மலர்களால் பேருந்துகளை அலங்கரித்தனர். அதனைத்தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க பேருந்துகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். ஆண்டு முழுவதும் தங்களை ஊரில் இருந்து ஓசூர், பெங்களூர் போன்ற நகர் பகுதிகளுக்கு அழைத்து சென்று மீண்டும் ஊருக்கு பாதுகாப்பாக கொண்டு வரும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அப்போது பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த விழாவில் சாலிவாரம் ஊரைச் சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.








