Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் வழக்கறிஞரை, மற்றொரு பெண் வழக்கறிஞரின் கணவர், ஏன் வெட்டினார் என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளி வருகின்றன!

ஓசூர் வழக்கறிஞரை, மற்றொரு பெண் வழக்கறிஞரின் கணவர், ஏன் வெட்டினார் என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளி வருகின்றன!  ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன், மூத்த வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம், இளம் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.  ஆனந்த் என்பவர், சட்டம் பயிலும் மாணவராக இருக்கும் நிலையில், அவரது மனைவி, வழக்கறிஞராக ஓசூர் நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறார். ஆனந்த், வழக்கறிஞரான தனது மனைவிக்கு, நீதிமன்றம் எதிரே உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றில் அலுவலகம் அமைத்துக் கொடுத்துள்ளார். பகையின் பின்னணி குறித்து கிடைக்கப்பெறும் தகவல்களை பார்க்கலாம்.

ஆனந்தின் வழக்கறிஞர் மனைவிக்கும், வழக்கறிஞர் கண்ணனுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனந்த், தனது வழக்கறிஞர் மனைவியுடனான நட்பை முறித்துக் கொள்ளும்படி, வழக்கறிஞர் கண்ணனுக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனந்தின் அறிவுரையையும் மீறி, நட்பு நீடித்ததாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ஆனந்த, வழக்கறிஞர் கண்ணனை கடுமையாக தாக்கியதாகவும், கண்ணன் அந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவம் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.  

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, மற்றொரு வழக்கறிஞர் தலைமையில், இருவருக்கும் இடையேயான அமைதி பேச்சு வார்த்தை, நடைபெற்றதாக வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பின்னும், வழக்கறிஞர் கண்ணன் மற்றும் ஆனந்த் இடையே, மோதல் போக்கு தொடர்ந்து வந்துள்ளது.  இன்று, அது முற்றிய நிலையில், ஆனந்த், வழக்கறிஞர் கண்ணனை கடுமையாக அரிவாள் கொண்டு தாக்கியுள்ளார்.  ரத்த வெள்ளத்தில் கண்ணன் சரிந்த நிலையில், அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி வழங்கினர். அவர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள காவேரி மருத்துவமனை என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கிறது.

இதற்கிடையே, வழக்கறிஞர் கண்ணனை வெட்டிய ஆனந்த், உடனடியாக குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் J M Two, உள்ளே சென்று கூண்டில் அமர்ந்து கொண்டார்.  அவருக்குப் பிணை வேண்டி, மற்றொரு வழக்கறிஞர், அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

வழக்கறிஞர் வெட்டப்பட்டதை அறிந்த சில வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தின் முன்பு கூடி, நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வினவி வருகின்றனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: