ஓசூரில் அருவாளால் தாக்கப்பட்ட வழக்கறிஞரின் நிலை என்ன? அது தொடர்பாக ஓசூரில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வை. கடந்த நாள் பகல் ஒரு மணி அளவில், வழக்கறிஞர் கண்ணன் என்பவரை, மற்றொரு பெண் வழக்கறிஞர் சத்யாவதி என்பவரின் கணவர், ஆனந்தகுமார் என்பவர், நீதிமன்ற வளாகத்தில் உள்ளே வைத்து, அருவாளால் வெட்டிய காட்சி, காணொளியாக சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படுகாயம் அடைந்த வழக்கறிஞர் கண்ணனை மீட்ட அவருடன் பணிபுரியும் வழக்கறிஞர்கள், அவரை ஆட்டோவில் ஏற்றி விரைந்து அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உதவிக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி வழங்கப்பட்டு, மேல் மருத்துவத்திற்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள, காவேரி மருத்துவமனை என்கிற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு, சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக, அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிரமான மருத்துவ கண்காணிப்பில் வழக்கறிஞர் கண்ணன், மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என தெரிய வருகிறது.
இதற்கிடையே, வழக்கறிஞர் கண்ணன் அவர்களின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த ஓசூர் காவல்துறையினர், பெண் வழக்கறிஞர், சத்தியாவதி மற்றும் அவரது கணவர் ஆனந்த் குமார் ஆகிய கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ளேயே வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்ட நிகழ்வு வழக்கறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில், நீதிமன்ற வளாகத்தின் அருகே ஓசூர் வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி, காவல் துறையினர் போதிய அளவில் காவல் பணியில் நீதிமன்ற வளாகத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிற மாநிலங்களில் உள்ள சட்டங்களின்படி, வழக்கறிஞர்களை பாதுகாக்கும் விதமாக, தமிழ்நாடு அரசும் சட்டம் இயற்ற வேண்டும் எண்ணமும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்தனர்.








