ஓசூர் அருகே குளித்து கும்மாளமிடும் யானைகள்! ஓசூரை அடுத்த, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கஸ்பா காட்டுப்பகுதியில், அறுபதுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் காட்டுப்பகுதி அருகே, திம்மசந்திரம் என்னும் ஊரில் உள்ள ஏரியில் இருபதுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தங்களின் குட்டிகளுடன் ஏரி நீரில் மகிழ்வாக கும்மாளமிட்டு குளியல் போட்டன. நீண்ட நேர குளியல் ஆட்டத்திற்கு பின் காட்டு யானைகள் அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் சென்றன.
கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா காட்டுப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த என்பதற்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஊடேதுர்கம், காட்டுப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிகிறது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறும் இந்த யானைகள், அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து, தங்களுக்கு தேவையான விளை பொருட்களை உண்டு மகிழ்கின்றன.
60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், திம்மசந்திரம், நொகனூர், ஆலஹள்ளி, தாவரக்கரை, தின்னூர், முள் பிளாட், மல சோனை, சந்தனப்பள்ளி உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில், பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, சுற்றித் திரிகின்றன.
யானைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்தி வந்த இடப்பெயர்வு பாதையில், மனிதர்கள் ஆங்காங்கே குடியிருப்பும் விளைநிலங்களையும் அமைத்துக் கொண்டதால், யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதல் போக்கு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், மாவட்ட வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும், நடவடிக்கை மேற்கொண்டு, யானைகளும் மனிதர்களும் மோதிக்கொள்ளாத வகையில் யானைகளை பாதுகாக்க வேண்டும் என தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.








