அதிகாலை நேரத்தில் கொட்டும் பனியை சாதகமாக்கி கும்பலாக சேர்ந்து கடைகளில் கைவரிசை காட்டும் மர்ம நபர்கள் : சிசிடிவி காட்சியில் உலா வரும் திருடர்களால் பரபரப்பு
ஓசூர் பகுதியில் நிலவி வரும் பனி காலத்தை தங்களுக்கு சாதகமாக்கி மர்ம நபர்கள் அதிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்து நகரின் மைய பகுதிகளான எம்ஜி ரோடு, நேதாஜி ரோடு, நாமல் பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் கைவரிசை காட்டி வருகின்றனர்.
ஓசூர் பகுதியில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடுமையான குளிர் இருக்கும், தற்போது ஓசூரில் கடுமையான குளிர் நிலவி வருகிறது அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த பனி காலத்தை பயன்படுத்தி திருட்டு கும்பல் ஓசூர் நகரின் மையப்பகுதியான எம்ஜி ரோடு, நேதாஜி ரோடு, நாமல் பேட்டை, போஸ் பஜார், திகிலர் பேட்டை, ஜனப்பர் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் கைவரிசை காட்டி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் பனி கொட்டுவதால் மக்கள் யாரும் வெளியே வருவதில்லை இதனை தங்களுக்கு சாதகமாக்கி மர்ம நபர்கள் கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லா பெட்டிகளில் உள்ள பணத்தை திருடி செல்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் எம் ஜி ரோட்டில் பிரதீப் குமார் (26) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை உடைத்து கல்லாவில் இருந்த 65 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். அதேபோல ஓசூர் நாமல் பேட்டையை சேர்ந்த ஜெப ராம் (37) என்பவரின் மளிகை கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த 55 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த திருட்டு கும்பல் கடைகளில் உள்ள பணத்தை மட்டுமே குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வருகிறது. கடைகளில் உள்ள மற்ற பொருட்களை திருடுவதில்லை என கூறப்படுகிறது.
இதேபோல ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் கால்நடைகளை குறி வைத்து திருடி செல்லும் சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக அவர்களை கண்காணித்து வருகின்றனர். மர்ம நபர்கள் ஓசூர் நகர வீதிகளில் இரவு நேரத்தில் திருடுவதற்காக உலா வரும் காட்சிகள் கடைகள் மற்றும் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








