ஓசூரில் இது புதிது. ஏழையாக இருந்தால் 8 லட்ச ரூபாய் கொடுங்கள், பணக்காரராக இருந்தால் அந்த பணம் வேண்டாம். மாநகராட்சியின் பதிலால், புதிதாக மேம்படுத்தப்பட்டு எம் ஜி ஆர் மார்க்கெட்டில், ஏற்கனவே கடை வைத்திருந்து, மீண்டும் கடை கேட்டு நிற்கும் ஏழை எளியவர்களின் நிலை குறித்து பதிவுதான் இது, நாங்கள் எதுவுமே செய்யல. எல்லாம் மேல இருக்கிறவங்க தான் செய்றாங்க. நாங்கள் எதுவுமே செய்ய முடியாது. முன்பணம் செலுத்த பணம் இல்லை. எங்களுக்கு உதவுங்கள் என்று வேண்டி வந்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அதிரடி பதில்
ஓசூரின் பழைய அடையாளங்களில் ஒன்று, ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள, எம் ஜி ஆர் மார்க்கெட். மிகவும் பழமையான சந்தை என்பதால், பாழடைந்த கட்டிடங்களுக்கு நடுவே சுமார் 115 கடைகள் அமைக்கப்பட்டு, சிறு குரு வியாபாரிகள், உயிருள்ள ஆடு கோழி முதல், பல்வேறு வகையான விளை பொருட்கள், விளைநிலங்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான பொருட்களை விற்று வந்தனர்.
பாழடைந்த நிலையில் இருந்த இந்த சந்தையை, புதுப்பித்து, புதிய கட்டிடங்கள் கட்டி, அதன் மூலம் சிறு குரு வியாபாரிகளும், பொதுமக்களும் பயன்படும் அதே வேளையில், ஓசூர் மாநகராட்சிக்கும் வருவாயை பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக அமைக்க வேண்டும், என்கிற கோரிக்கை வலுவாக எழுந்தது.
இதை தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பழைய கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கடைகளுக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது. புதிதாக மொத்தம், நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட கடைகள், கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடைகள் தேவைப்படுவோர், ஏலம் ஒப்பந்தம் மூலம், அதாவது டெண்டர் முறையில், கடைகளை எடுத்துக் கொள்ளலாம், என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
கடை தேவைப்படுபவர், ஏலத்தில் பங்கெடுக்க, கடை இனத்திற்கு ஏற்ப, ரூபாய் 8 லட்சம் வரையிலான அசையா சொத்து சான்று வழங்க வேண்டும். அத்தகைய சான்று வழங்க இயலாதவர்கள், ரூபாய் 6 லட்சம் சால்வெண்சி சான்று வழங்க வேண்டும். மேலும், கடைக்கான முன்வைப்புத் தொகையாக ரூபாய் 5 லட்சம் வரை செலுத்த வேண்டியுள்ளது, என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே கடை வைத்திருந்த 115 கடைகாரர்களில், பெண்கள் உள்ளிட்ட 68 கடைக்காரர்கள், தாங்கள் ஏழை எளியவர்கள் என்றும், தங்களுக்கு ஏலத்தில் பங்கெடுக்க, ஓசூர் மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கும் அவ்வளவு பெரிய தொகையை தங்களால் செலுத்த முடியாது என்றும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில், மாநகராட்சி மேயர் அவர்களிடம் தங்களது இயலாமையை கூறி, தங்களுக்கு உதவுமாறு, கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மாநகராட்சி மேயர், ஏலம் தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் மேலிடத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. இது எல்லா மாநகராட்சிகளுக்கும் பொதுவானது. ஆகவே, இது தொடர்பில், இன்றைய சூழலில், தம்மால் உதவ இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.
குறுக்கிட்டு பேசிய கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர், திரு கோபிநாத் அவர்கள், கோரிக்கை வைத்தவர்களிடம் கூறும் பொழுது, ஓசூர் மாநகராட்சி மேயர் தம்மால் ஆன உதவிகளை உங்களுக்கு வழங்குவார், என அமைதி வார்த்தைகள் கூறி, அனுப்பி வைத்தார்.








