இரவு நேரத்தில் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து துணிச்சலாக வீடுகளுக்கு நடந்து செல்பவரா நீங்கள்? எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக திருடர்கள், ஓசூர் நகர் சாலையில் ஆட்டம் போட்டுக் கொண்டு, திருடுவதற்கு வலம் வருகிறார்கள். C C T V காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் குளிரில் போத்திகிட்டு நல்லா தூங்குங்க, நாங்க கடை ஷட்டரை உடைத்து, திருடிட்டு போறோம். இரவு நேரத்தில், கூட்டமாக கும்மாளம் போடும் கடை ஷட்டர் உடைப்பு திருடர்கள்.
பொதுவாகவே, ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடுமையான குளிர் நிலவும். கடந்த சில நாட்களாக, ஓசூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில், குறிப்பாக அதிகாலை பொழுதில், கடுமையான பனிப்பொழிவும், குளிரும் நிலவி வருகிறது.
கொட்டும் பனியை தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்தி, கும்பலாக சேர்ந்து கடைகளில் கைவரிசை காட்டும் மர்ம நபர்கள் குறித்த CCTV காட்சி இப்போது வெளியாகி உள்ளது.
ஓசூர் பகுதியில் நிலவி வரும் பனிப்பொழிவையும், நடுக்கும் குளிரையும் தங்களுக்கு வாய்ப்பாக மாற்றி, மர்ம நபர்கள் அதிகாலை நேரத்தை தேர்ந்தெடுத்து, ஓசூர் நகரின் நடுப்பகுதிகளான எம்ஜி சாலை, நேதாஜி சாலை, நாமல் பேட்டை, போஸ் பஜார், திகிலர் பேட்டை, ஜனப்பர் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில், ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் எம் ஜி ரோட்டில் பிரதீப் குமார் என்பவருடைய மளிகை கடை ஷட்டரை உடைத்து, கல்லாவில் இருந்த 65 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். அதேபோல, ஓசூர் நாமல் பேட்டையை சேர்ந்த ஜெப ராம் என்பவரின் மளிகை கடையில், பூட்டை உடைத்து உள்ளே சென்று, கல்லாவில் இருந்த 55 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள், ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த திருட்டு கும்பல், கடைகளில் உள்ள பணத்தை மட்டுமே குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வருகிறது. கடைகளில் உள்ள மற்ற பொருட்களை திருடுவதில்லை என கூறப்படுகிறது. மேலும், தங்களது திருட்டுத் தொழிலில் ஒழுக்கத்தையும் கடைபிடிக்கின்றனர். பணத்தை தவிர்த்து வேறு எந்த பொருளையும் தொட்டு கூட பார்ப்பதில்லையாம்.
இந்தத் திருடர்கள், முகத்திற்கு மாஸ்க் அணிந்து, திருட்டில் ஈடுபடுகின்றனர்.
ஓசூர் நகர் பகுதியில் திருட்டு குறித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, தேன்கனிக்கோட்டை பகுதியில், இரவு நேரங்களில் மர்ம கும்பல், கால்நடைகளை குறி வைத்து திருடி செல்லும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திருட்டு நிகழ்வுகளில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக அவர்களை கண்காணித்து வருகின்றனர்.








