ஓசூரில் இரண்டாம் உலகப் போரில் அகற்றப்பட்ட போக்குவரத்து பாதை மீட்டெடுக்கப்படுமா? சுமார் 75 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் மக்களின் கோரிக்கை, நிறைவேற்றப்படுமா? 75 ஆண்டுகளாக கோரிக்கைக்கான பதில் என்ன என்று பார்க்கலாம். வாங்க.
1942 ஆண்டு வரை, ஓசூரில் இருந்து, ஓசூர், கிருட்டுனகிரி, கந்திகுப்பம், பர்கூர்,பெரிய கந்திலி, பெரிய அக்ரகாரம், வழியாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வரை இருப்புப் பாதை தண்டவாளம் வெள்ளைக்காரர்களால் அமைக்கப்பட்டு, தொடர்வண்டி போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, அதாவது, சுமார் 75 ஆண்டுகளுக்கு முன், 1942ல், அந்த இருப்புப் பாதை பிரித்து எடுக்கப்பட்டு, வேறு ஏதோ ஒரு பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் பின், ஓசூர், கிருஷ்ணகிரி, வழியாக ஜோலார்பேட்டை வரை இருப்புப் பாதை அமைத்து தர வேண்டி பல அமைப்புகள், பல்வேறு ஆண்டுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 2000 ஆண்டு வாக்கில், கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், அப்போதைய ஒன்றிய அரசிற்கு, 101 கிலோமீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதை அமைப்பதற்கான, 559 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்ட வரைவு, இருப்புப் பாதை வாரியத்தின், பணிகள் ஒன்றின், இயக்குனர் அவர்கள், 2008 ஆண்டு சமர்ப்பித்தார்.
2009 அதை ஆய்வு செய்த ஒன்றிய அரசின் இருப்புப் பாதை அமைச்சகம், திட்டம் வருவாய் ஈட்டக் கூடியதாக இல்லை எனக் கூறி, கிடப்பில் போட்டது.
அன்பின், ஒவ்வொரு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலின் போதும், வேட்பாளர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவ்வப்போது வந்து செல்லும் ஒன்றிய அமைச்சர்களும், இருப்புப் பாதை அமைத்து தரப்படும் என வாயால் உறுதியளித்து விட்டு செல்கின்றனர்.
இந்த இருப்புப் பாதை குறித்த வரலாறு தெரிந்தவர்கள் ஓசூர் ஆன்லைனிடம் கருத்து கூறும் பொழுது, 1970 ஆண்டு முதல் இதுவரை, சுமார் 11 முறை இருப்புப் பாதையை மீண்டும் அமைப்பதற்கான கள ஆய்வுகளும், வரைவு திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.
1989 வரைவு திட்டத்தின் படி, இருப்புப் பாதை அமைப்பதற்கு 147 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. 2003 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வரைவு திட்டத்தின் படி, செலவினம் 225 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. 2006ம் ஆண்டில், செலவினம் 500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. மீண்டும், 2018 ஆண்டில், திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று, அதுவும், வருவாய் ஈட்டுவதற்கான வழி இல்லை என சொல்லி, கிடப்பில் வீசப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து, மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ரூபாய் 2 கோடியே 45 லட்சம் செலவில், மீண்டும் ஒரு வரைவு திட்டம், 2019 ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. கடைசியாக மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில், சுமார் ஏழே முக்கால் கிலோ மீட்டர் தொலைவிற்கு, மலைகளை குடைந்து குகை பாதையாகவும், அமைக்க வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதற்கான செலவினம் ஆயிரத்து நானூற்று அறுவது கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டது.
இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் கடந்துள்ள நிலையில், திட்டம், வரைவு திட்டமாகவே, கிடப்பில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்திருந்த ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர், இந்த இருப்புப் பாதை திட்டம் விரைவு படுத்தப்படும் என கூறி மீண்டும் இந்த திட்டம் குறித்து மக்களுக்கு நினைவூட்டி சென்றார்.
உற்பத்தி மற்றும் வரி வருவாயில், கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக, ஓசூர் விளங்கி வரும் சூழலில், ஓசூரை சென்னையுடன் இணைக்கும், தொன்மை மிக்க, இந்த வழித்தடம் மீட்டெடுக்கப்பட்டால், அரசுகளுக்கு வரி வருவாயும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, சரக்கு போக்குவரத்திற்கு எளிதான சூழலையும் ஏற்படுத்தும் என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.








