ஓசூர் பாகலூர் சாலையை சீர் செய்ய, ரூபாய் 16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நாளிதழ்களில் செய்தி அறிந்து, பகுதி மக்களும், சாலையை போக்குவரத்திற்கு பயன்படுத்துபவர்களும், மகிழ்ச்சி அடைந்தனர். மகிழ்ச்சி அடையும் அதே வேளையில், தன்னார்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஓசூர் பாகலூர் சாலையை சீர் செய்யும் பொழுது, நெடுஞ்சாலை துறையினர் கவனித்துக் கொள்ள வேண்டிய சில கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
ஓசூர் பாகலூர் சாலை, தேசிய நெடுஞ்சாலை எண் 648, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வருகிறது. ஓசூர் பேருந்து நிலையம் எதிர்ப்புறம் இருந்து, சமத்துவபுரம் வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை, மாநில அரசிடமிருந்து, ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை துறையிடம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடந்த ஆறு ஆண்டுகளாக, இந்த மூன்று கிலோமீட்டர் பகுதி சாலையில், எவ்வித மேம்பாட்டு பணியும் மேற்கொள்ளாமல், குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு இடையூறான நிலையில், கைவிட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் ஆணையத்தின் பொறுப்பற்ற போக்கினால், குண்டும் குழியுமான இந்த சாலையில், கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும், பல நூறு விபத்துக்கள் நடைபெற்று, அதில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. குறிப்பாக பெண்கள், குண்டும் குழியுமான இந்த சாலையின் அவல நிலையால், தங்களது கை கால்களை உடைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், உயிர்களையும் மாய்த்துக் கொண்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை துறையின் மண்டல பொறியாளர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒரு சாலையை கையகப்படுத்தினால், அதை மேம்படுத்துவதற்கு, குறைந்தது 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்தனர்.
சாலையின் இந்த மூன்று கிலோ மீட்டரை பொறுத்தவரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தி ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த நாள் சாலையை சீர் செய்வதற்கு ரூபாய் 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
அப்பகுதி குடியிருப்பு மக்கள் மற்றும் சாலையை பயன்படுத்தும் பயணிகள், சாலையை சீர் செய்வதாக கூறி, Patch Work மட்டும் செய்து, ஒரு மழைக்கே கரைந்து விடும் நிலையில் மீண்டும் விட்டு விடாமல், முழுமையாக சாலையை தோண்டி எடுத்து, முறையான செப்பனிடும் பணி மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் துறை சார்ந்த பொறியாளர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர்.








