ஓசூர் காவல் நிலையத்தில், இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார். I am sorry Ayyappa என்றொரு பாடலை, கடந்த இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு, இசை நிகழ்ச்சி ஒன்றில் பாட வைத்திருந்தார். குத்துப் பாடல்கள் பாடி புகழ்பெற்ற இசைவாணி என்கிற பாடகியை வைத்து, நீலம் பண்பாட்டு நடுவத்தின் மூலம், இந்த பாடல் பாடப்பட்டது. நீலம் பண்பாட்டு நடுவம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பெரும்பாலான பெண் விடுதலை மற்றும் புரட்சிகரமான சிந்தனை முன்னெடுக்கும் இசை நிகழ்ச்சிகளில், இந்த பாடலை அவ்வப்பொழுது இசைவாணி பாடியிருந்தார்.
ஐ ஆம் சாரி, ஐயப்பா! நான் உள்ள வந்தா என்னப்பா? பொண்டாட்டிய அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா... என்று அந்த பாடல் வரிகள், பெண் விடுதலை குறித்த உட்கருத்தை கொண்டிருப்பதாக கருதி, மதரீதியான பார்வை, இந்த பாடலின் மீது பதியவில்லை.
இந்த ஆண்டு, ஐயப்பனுக்காக பலர் விரதம் இருந்து, மலைக்கு புறப்படும் நிலையில், திடீரென, இந்த பாடல் சர்ச்சைக்குரிய பாடலாக பலராலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஓசூர் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா சார்பில், ஓசூர் நகர் காவல் நிலையத்தில், பா ரஞ்சித் மற்றும் பாடலை பாடிய இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஐயப்ப பக்தர் ஒருவர் இது தொடர்பாக கருத்து கூறும் பொழுது, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவோ அல்லது காவல் நிலையம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க முயல்வதாகவோ இருந்தால், அதை ஐயப்ப பக்தர்கள் மலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகும் கார்த்திகை, மார்கழி திங்கள்களில் செய்யக்கூடாது. அப்படி செய்வதால், தேவையற்ற பெரிய அளவிலான கவன ஈர்ப்பு, இந்த பாடலுக்கு கிடைக்கிறது. ஐயப்ப பக்தர்கள் மலைக்குச் செல்லாத நாட்களில், சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால், இந்தப் பாடலுக்கு கவன ஈர்ப்பு பெறாமல் போயிருக்கும். இப்பொழுது, இணையத்திலும், சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும், இந்த பாடல் குறித்து கருத்து வருவதால், தேவையற்ற ஈர்ப்பு ஏற்பட்டு, பா ரஞ்சித் மற்றும் இசைவாணி போன்றவர்கள் தங்களுக்கான விலையில்லாமல் ஒரு விளம்பரத்தை தேடி கொள்கின்றனர்.








