ஓசூர், தமிழ்நாடு அரசியல் தேர்தல் களத்தின் நடுப்புள்ளியாக மாறி வருகிறதா? தேசிய மற்றும் மாநில தலைவர்களின் தொடர் ஓசூர் வருகையால், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் மேல் உள்ள நிலையில், இப்போதே சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது ஓசூர் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம். திடீரென, தேர்தல் களத்தில், ஓசூர் முதன்மை பெறுவதன் பின்னணி என்ன? தெரிந்து கொள்ளலாம், வாங்க!
கடந்த 20 ஆண்டுகளில், ஓசூர், தொழில்துறை வளர்ச்சியில், மாநிலத்தின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில், பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகியவற்றின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடுத்தபடியாக, வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் ஓசூர். திருப்பூர், சிவகாசி, ராணிப்பேட்டை, போன்ற தொழில் நகரங்களை காட்டிலும் ஓசூர் தொழில் வளர்ச்சியில் முதன்மை பெற்று முன்னோடியாக திகழ்கிறது.
தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்தும் கூட மக்கள் புலம்பெயர்ந்து, ஓசூரில் குடியேறி வருகின்றனர். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றால், ஓசூர் வந்தோரை, வாழ வைப்பது மட்டுமல்லாமல், அதன் சிறந்த வானிலையால் குளிர்வித்தும், மகிழ்வித்தும் வருகிறது.
கடந்த சில நாட்களாக, மாநில அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, தேசிய தலைவர்களும், தொடர்ந்து ஓசூர் பகுதிக்கு வருகை தந்து, அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
வருகை புரியும் ஒவ்வொரு தலைவர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி சார்பில் கருத்துக்களை உதிர்த்து செல்கின்றனர்.
திமுகவை பொருத்தவரை, தமிழ்நாடு மாநிலம் மற்றும் ஓசூர் உள்ளாட்சியில் ஆளும் கட்சியாக உள்ளது. தொடர்ந்து அக்கட்சி சார்பில், கட்சி தொண்டர்கள் இடையே பல்வேறு கட்ட கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டச் செயலாளர்கள், தீவிரமாக கட்சி பணியாற்றி வரும் நிலையில், திமுகவின் கிளை அமைப்புகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. கடந்த நாள், திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கூட்டம், செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், இரண்டாயிரத்து இருபத்து ஆறாம் ஆண்டு எப்படி தேர்தலை சந்திப்பது என்பது குறித்த திட்டங்கள் கலந்துரையாடப்பட்டன.
அதிமுகவின், முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி அவர்கள் கடந்த சில நாட்களில் மட்டும் இரு முறைக்கு மேல் ஓசூருக்கு வந்து, கட்சியினர் இடையே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கலந்துரையாடி சென்றுள்ளார்.
விடுதலைக் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக குறித்தும் கூட்டணியின் வலிமை குறித்தும் ஓசூரில் கருத்துக் கூறி சென்றார்.
பாஜகவின் இணை அமைச்சர், ஓசூரில் பாஜக கட்சியின் கொடிபறப்பது குறித்து பெருமிதம் அடைந்தார்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான வைகோ அவர்களது மகன் துரை வைகோ, கூட்டணி குறித்தும், மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்பது குறித்தும் ஓசூரில் கருத்து கூறினார்.
ஓசூர் மக்கள், அனைத்து கட்சியினரின் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும், உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஓசூர் மக்கள், தொழில்துறை சார்ந்து இருப்பதால், தொழில் முன்னேற்றம், வேலை வாய்ப்பு பெருக்கம், வருவாய் உயர்வு, அடிப்படை கட்டமைப்பு, ஆகியவை குறித்து தெளிவான மனநிலையில் உள்ளனர். தேர்தலின் போது, கட்சியினர் கொடுக்கும் பணத்தை ஓசூர் பெரும்பகுதி வாக்காளர்கள் பெற்றுக் கொண்டாலும், ஒவ்வொரு முறையும், சிந்தித்தே வாக்களிக்கின்றனர், என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகின்றனர்.








