Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் அருகே A T M இயந்திரத்தை மொத்தமாக தூக்கி வந்து, கொள்ளை முயற்சி.

ஓசூர் அருகே A T M இயந்திரத்தை மொத்தமாக தூக்கி வந்து, கொள்ளை முயற்சி.  பொழுது விடிவதற்குள் முழுமையாக உடைக்க முடியாததால், மக்கள் நடமாட்டத்தை கண்டவுடன், இயந்திரத்தை விட்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி ஓட்டம். ஓசூர் அருகே ஆனெக்கல் வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சன அள்ளி பகுதியில், தனியார் வங்கியின் ஏ டி எம் நடுவம் இயங்கி வருகிறது. இந்த நடுவத்திற்குள் அதிகாலை நேரத்தில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், அங்கிருந்து ஏ டி எம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துள்ளனர்.  

பின்னர் அந்த ஏ டி எம் இயந்திரத்தை ஒரு சரக்கு வண்டியில் ஏற்றி அருகில் உள்ள, யூகலிப்படஸ் மர தோட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இருவரும் சேர்ந்து ஏ டி எம் இயந்திரத்தை ஆக்ஸா பிளேடால் அறுத்து, உள்ளே உள்ள பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். நீண்ட நேரமாக பிளேடால் ஏ டி எம் இயந்திரத்தை அறுத்து பார்த்தும், இயந்திரத்தை அவர்களால் உடைக்க முடியவில்லை. தொடர்ந்து விடியற்காலை ஆனதால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் துவங்கியது. இதனால் தாங்கள் பிடிபட்டு விடுவோம், என நினைத்து, ஏ டி எம் இயந்திரத்தை அங்கேயே விட்டு விட்டு இருவரும் தப்பி சென்றுள்ளனர்.

தோட்டத்திற்குள் ஏ டி எம் இயந்திரம் கிடப்பதை பார்த்த மக்கள், அத்திப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு சென்ற காவலர்கள் ஏ டி எம் இயந்திரத்தை கைப்பற்றி வினவினர். அந்த இயந்திரத்திற்குள் 10 லட்சம் ரூபாய் பணம், இருந்ததும் தெரியவந்தது.  மர்ம நபர்கள் உடைக்காததால் பணம் முழுவதும் தப்பியது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து கொள்ளையர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: