ஓசூர் அருகே, மை தடவி, புஷ்பாவை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர். புஷ்பா, ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்த, பள்ளப்பள்ளி ஊரில் கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை இடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
வாரிசு சான்றிதழ் போன்ற அரசு சார்ந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் மக்களிடம், புஷ்பா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தம்பிதுரை, என இருவரும் சேர்ந்து, கையூட்டாக பல ஆயிரம் ரூபாய் நச்சரித்து வாங்கியதாக பரவலாக மக்கள் கருத்து கூறுகின்றனர். அப்பகுதியில் விவசாயம் செய்து வரும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட புஷ்பா மற்றும் தம்பிதுரை, வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூபாய் 4000 கையூட்டாக கேட்டுள்ளனர். முறையாக விண்ணப்பித்தும் கையூட்டு கேட்பதால் எரிச்சல் அடைந்த முருகேசன், இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை இடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், வேதிப்பொருட்கள் தடவிய ரூபாய் நோட்டுகளை, முருகேசன் இடம் வழங்கிய, அதை கையூட்டாக புஷ்பா மற்றும் தம்பி துறை இடம் கொடுக்கச் செய்தனர். அதை இருவரும் வாங்கி எண்ணிப் பார்க்கும் பொழுது, மறைந்திருந்த காவல்துறையினர் இருவரையும், கையும் களவுமாக மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.








