Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் தொழிலாளர் சங்கங்கள், ஒன்றிய அரசின் நான்கு சட்ட தொகுப்புகளை எதிர்ப்பது ஏன்?

ஓசூர் தொழிலாளர் சங்கங்கள், ஒன்றிய அரசின் நான்கு சட்ட தொகுப்புகளை எதிர்ப்பது ஏன்? ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக நான்கு குறியீடுகளை கொண்டு வர ஒன்றிய அரசு முன்மொழிகிறது. தொழிலாளர் ஒழுங்குமுறையை எளிமைப்படுத்துவதும், புதுமைப்படுத்துவதுமே இதன் நோக்கம் என ஒன்றிய அரசு கூறுகிறது. பழைய சட்டங்களை ஒன்றாக தொகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு எளிமையாக்குகிறோம் என்கிறது ஒன்றிய அரசு. இந்த சீர்திருத்தங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நான்கு சட்ட தொகுப்புகளில் உள்ள தொழிலாளர் நலன் சார்ந்த நன்மை மற்றும் தீமைகள் குறித்து புரிந்து கொள்ளலாம். வாங்க.

தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சார்ந்த சட்டங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, எளிமையாக நடைமுறைப்படுத்தத் தக்க வகையில், மாற்றி அமைக்கப்படுவதே, ஒன்றிய அரசு முன்வொழியும் நான்கு சட்ட தொகுப்புகள் அல்லது குறியீடுகள்.

அவை முறையே, ஊதியங்கள் குறித்த குறியீடு 2019, தொழில்துறை உறவுகள் குறியீடு 2020, சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020, தொழில் பாதுகாப்பு, மற்றும் நலவாழ்வு மற்றும் பணி நிலைமைகள் குறியீடு 2020.

இந்த நான்கு குறியீடுகளில் என்ன கூறியிருக்கிறது என முதலில் தெரிந்து கொள்ளலாம்.

சட்டங்களை எளிமைப்படுத்துதல் இதன் நோக்கம். 29 நடுவன் தொழிலாளர் சட்டங்களை நான்காக ஒருங்கிணைத்து, சிக்கலைக் குறைத்து, இணக்கத்தை மேம்படுத்துகின்றன.  எடுத்துக்காட்டாக, குறைந்தபட்ச ஊதியச் சட்டம், ஊதியம் செலுத்துதல் சட்டம், போன்றவற்றை ஊதியக் குறியீட்டுடன் மாற்றுகிறது.

அனைத்து அளவிலான குறைந்தபட்ச ஊதியம், அதாவது அமைப்புசாரா துறை உட்பட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்வது.

எடுத்துக்காட்டாக, சுமார் 500 மில்லியன் தொழிலாளர்களுக்கு, ஊதியப் பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது Ministry of Labour and Employment, 2021.

தொழில் செய்வதை எளிதாக்குதல். தொழிலாளர்களை பணியமர்த்துவதிலும் அவர்களை, எளிய வழிகளில் பணிநீக்கம் செய்வதிலும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன, மேலும் ஆற்றல்மிக்க தொழிலாளர் சந்தையை வளர்க்கின்றன. எடுத்துக்காட்டாக, இதுவரை இருந்த சட்ட நடைமுறைகளின் படி, 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற்சாலைகள் இப்போது அரசின் ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய இயலாது. புதிய குறியீடுகளின் கீழ், 300 தொழிலாளர்களையும், ஏன் என்ற கேள்விக்கு இடமில்லாமல், ஒரே நேரத்தில் பணியை விட்டு நீக்கிவிடலாம்.

சேவை துறையில், பகுதி நேர பணியாளராக பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வழங்குவது. சமூகப் பாதுகாப்புக் குறியீடு, பகுதி நேரமாக சேவை துறையில் மற்றும் அவை சார்ந்தவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நன்மைகளை விரிவுபடுத்துகிறது. எடுத்துக்காட்டாக, ஓலா மற்றும் சொமேட்டோ போன்ற ஒருங்கிணைப்பு செயலைகள் மூலம், பகுதி நேரமாக பணி புரியும் தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு நிதிக்கு பங்களிக்க வேண்டும்.

தொழிலாளர் முரண்பாடுகளை எளிய முறையில் தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் வழங்குவது.

நான்கு குறியீடுகள், எதைக் குறிக்கின்றன என தெரிந்து கொண்டோம்.  இவற்றால் தொழிலாளர் நலனில், பாதிப்புகள் என்ன என தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தை எதிர்த்து, தொழிலாளர் அமைப்புகள், வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமாயின், 60 நாட்களுக்கு முன்பாகவே, தொழில் நிறுவனத்திற்கு, அறிவிப்பு வழங்கி இருக்க வேண்டும்.

சமூக பாதுகாப்பு வழங்குவதாக நான்கு குறியீடுகளை அமல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் கூறினாலும், முறைசாரா அமைப்புகளில், எடுத்துக்காட்டாக, சேவை துறைகளில் பகுதி நேரமாக பணிபுரிபவர்களுக்கு, மேம்போக்கான வரைமுறைகள் மட்டுமே வகுக்கப்பட்டுள்ளது தவிர, முழுமையான சமூக பாதுகாப்பு வழங்குவதற்கு இந்த குறியீடுகளில் எந்த திட்டங்களும் இல்லை.

ஏன் என்கிற கேள்வியே இல்லாமல், 300 தொழிலாளர்களைக் கொண்ட, தொழிற்சாலைகள், அனைத்து தொழிலாளர்களையும் நொடிப்பொழுதில் வேலையை விட்டு நீக்கி விட முடியும்.  

தொழிலாளர்களுக்கு, வேலை செய்யும் இடத்தில், பாதுகாப்பு குறித்த தெளிவு இந்த குறியீடுகளில் இல்லை.  எடுத்துக்காட்டாக, கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணி புரியும் இடத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு தீர்வு இல்லை.

இந்த நான்கு குறியீடுகளும், மாநில அரசு நடைமுறைப்படுத்துவதை பொறுத்து அமைகிறது.  அப்படியானால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வகையில், சட்டம் புரிந்து கொள்ளப்பட்டு, தொழிலாளர்களுக்கு இன்னலே மிஞ்சும்.

தொழிலாளர்களின் வேலை நேரமும் மாற்றி அமைக்கப்படுகிறது.  இதன் மூலம் நாளொன்றுக்கு, 8 மணி நேர வேலை என்பதை மாற்றி, 12 மணி நேரம் வேலை என, வேலை நேரத்தை நீட்டிக்கிறது.  ஒரு கிழமைக்கு மொத்தம் 48 மணி நேரம் பணிபுரிய வேண்டும், என குறியீடு கூறினாலும், தொழிலாளர்களை, நீண்ட நேரம் பணிபுரிய வைப்பதே இதன் உள்நோக்கம் என்கின்றன தொழிலாளர் சங்கங்கள்.

பெண்களையும் ஆண்களுக்கு ஒப்பாக கருதி, அனைவருக்கும் ஒரே ஊதியம் என சட்டம் மேம்போக்காக கூறினாலும், உள்ளார்ந்து நோக்கினால், பெண்களை இரவு நேர பணிகளில் அமர்த்தலாம் என தொழிற்சாலைகளுக்கு வழிவகை வகுத்துக் கொடுக்கிறது.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தொழில்கள் என அடையாளப்பட்ட தொழில்களில், இனி 50 தொழிலாளர்கள் வரை, எவ்வித சட்ட நடைமுறைகளுக்கும் உட்படாமல் பணியில் அமர்த்தலாம்.  முன்பு 20 தொழிலாளர்களுக்கு மேல் அத்தகைய பணிகளில் ஈடுபட வைத்தால், தொழிலாளர் நலன் சார்ந்த நடைமுறைகளை அமல்படுத்தி இருக்க வேண்டும்.

மின்சாரம் பயன்படுத்தாத தொழில்களில், 40 ஊழியர்கள் வரை, எவ்வித சட்ட வரைமுறைகளும் இல்லாமல் பணியமர்த்தலாம்.  

புதிய குறியீடுகளின் மூலம், தேசிய பேரிடர்கள் நிகழும் பொழுது, தொழிலாளர்களின் வைப்பு நிதி மற்றும் காப்பீடுகளை, ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

தொழில் புரிபவர்களுக்கு, இந்த நான்கு குறியீடுகள் பல வகைகளில் நன்மை செய்வதாக அமைந்துள்ளது. தி இந்து நாளிதழில் தலையங்கம் ஒன்றில் குறிப்பிட்டது போல, கொரோனா பேரிடர் ஏற்பட்ட பொழுது, பெரிய நிறுவனங்களின் முதலாளிகளோ அல்லது அவர்களின் மேலாளர்களோ எவ்வகையிலும் பாதிப்படையவில்லை.  ஆனால், தொழிலாளர்களே வறுமையில் வாடினர்.  ஆகவே ஒன்றிய அரசு, தொழில் புரிபவர்களுக்கு சலுகைகள் வழங்குவதில் முதன்மை காட்டுவதை காட்டிலும், அடிப்படை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதிகள் வழங்க வேண்டும்.  ஏனெனில், இந்தியாவில், ஆப்பிரிக்க கண்டத்தை காட்டிலும், பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு உள்ளது.

ஓசூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள  தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை, ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சில் செயலாளர், கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஓசூர் ராம் நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்கம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கம், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட நடுவன் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

https://www.indiaspend.com/why-trade-unions-are-opposing-labour-law-reforms/

https://byjus.com/free-ias-prep/labour-reforms/

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: