Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக நாற்காலி சண்டையால், ஓசூர் வளர்ச்சி கடுமையாக பாதிப்பு.

ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக நாற்காலி சண்டையால், ஓசூர் வளர்ச்சி கடுமையாக பாதிப்பு.  இதில் வேடிக்கை என்னவென்றால், ஊராட்சி ஒன்றியத்தில், அ தி மு க பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அ தி மு க வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருக்கு, அதிமுகவினர், நாற்காலி போட மறுத்து ஒருமையில் பேசி சண்டை. அ தி மு க வைச் சேர்ந்தவருக்கு நாற்காலி வழங்கும்படி, தி மு கவினர், பரிந்துரை.

ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த நாள், நவம்பர் 27, புதன்கிழமை, ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. அ தி மு க வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அ தி மு க வை சேர்ந்த, துணை தலைவர் நாராயணசாமி, உள்ளிட்ட மொத்தம் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், அ தி மு க வை சேர்ந்த துணைத்தலைவர் நாராயணசாமி, தனக்கு மேடையில் நாற்காலி போட வேண்டும் எனக் கூறி கீழே கிடந்த நாற்காலியை எடுத்து தலைவர் மற்றும் பி டி ஓ அமர்ந்திருந்த மேடையில் போட்டுள்ளார்.

அதற்கு தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, துணைத்தலைவர் நாராயணசாமி வெளி நடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக தி மு க கவுன்சிலர்கள் 7 பேர் மற்றும் தேமுதிக கவுன்சிலர் ஒருவர், என மொத்தம் 9 பேர் வெளியில் சென்றனர். இதனையடுத்து, அதிமுகவை சேர்ந்த தலைவர், மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், என 7 பேர் அங்கே அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் கூட்டம் நடத்துவதற்கு கூடிய நிலையில், வெளியில் சென்ற அ தி மு க துணைத்தலைவர் நாராயணசாமி, மீண்டும் கூட்ட அரங்கிற்குள் வந்து, தனக்கு நாற்காலி வேண்டும் எனக்கேட்டார்.

அதற்கு தி மு க கவுன்சிலர்கள் 7 பேரும் அவருக்கு ஆதரவாக நாற்காலி கொடுக்க வேண்டும் என கேட்டனர். ஆனால் அ தி மு க வை சேர்ந்த தலைவர் சசி வெங்கடசாமி, மேடையில் உட்கார நாற்காலி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தலைவரும், துணைத் தலைவரும், ஒருவரை ஒருவர், ஒருமையில் பேசியபடி வாய் சண்டையில் ஈடுபட்டனர். இதனால், ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

இருவரையும் கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து அமைதி படுத்தினர். அதனைத் தொடர்ந்து, துணைத் தலைவர் வெங்கடசாமி, தி மு க கவுன்சிலர்களோடு, வெளிநடப்பு செய்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில், துணைத் தலைவருக்கு, மேடையில் நாற்காலி போடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 3 கூட்டங்களில், அதாவது கடந்த ஆறு மாதங்களாக, துணைத்தலைவருக்கு மேடையில் நாற்காலி போடுவது இல்லையாம்.

துணைத் தலைவரும், தனக்கு நாற்காலி வேண்டும் என பலமுறை வலியுறுத்தி கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து அவரது கோரிக்கை, தலைவரால் தள்ளுபடி செய்யப்படவே,  திமுக கவுன்சிலர்களோடு அவர் சேர்ந்து கொண்டு, கடந்த 3 கூட்டங்களை புறக்கணித்து, எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற விடாமல் செய்கிறார், என அதிமுகவை சேர்ந்த, தலைவர் சசி வெங்கடசாமி, மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று நடந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட மொத்தம் உள்ள 16 கவுன்சிலர்களில், 9 பேர் வெளிநடப்பு செய்த நிலையில், மீதமுள்ள 7 பேரால் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 7 கோடி ரூபாய் வரை, ஓசூர் பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களுக்காக செலவிட வேண்டிய பணம் இருந்தும், மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: