தமிழ்நாடு முதலமைச்சரின் கொள்கை, மக்கள் அனைவருக்கும் ஒருமித்த வளர்ச்சி, என்கிற பாதையை நோக்கி அமைந்திருக்க, நமது ஓசூர் மாநகராட்சி, இதை தவறாக புரிந்து கொண்டதோ? என்னவோ?, எல்லா மாமன்ற வார்டு பகுதிகளிலும், அது மேயர் அவர்களின் வார்டு பகுதியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியின் எதிரி கட்சிக்காரரின் வார்டு பகுதியாக இருந்தாலும் சரி, சாலைகள் அனைத்தும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக, போக்குவரத்திற்கு எள்ளளவும் பயன்படுத்த இயலாத ஒன்றாக இருந்து வருகிறது.
ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதல்ல, அதை குண்டும் குழியுமாக வைத்திருப்பதற்கு. தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும், மாநில நெடுஞ்சாலையாக இருந்தாலும், ஓசூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகள் துவங்கி சந்து பொந்துகள் வரை, சாலைகள் அனைத்தும், குண்டும் குழியுமாக, சாலை விபத்துக்களை ஏற்படுத்தி, உயிர் பலி வாங்குவதற்கு, ஏங்கி நிற்கும் சாலைகளாகவே உள்ளது. ஏற்கனவே, இத்தகைய சாலைகளால், பல விபத்துக்கள் ஏற்பட்டு, பலர் கை கால்களை உடைத்துக் கொண்டுள்ள நிலையில், சிலர் தங்களது உயிரையும் விட்டுள்ளனர் என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
-----
சாலை, கழிவுநீர் வடிகால் ஓடை, பூங்காக்கள், காவேரி தண்ணீர், அடிக்கடி மின்தடை, நகர் உட்புறத்தை பொருத்தவரை முறையான பொது போக்குவரத்து குறைபாடு, என ஏராளமான குறைகள், ஓசூர் மாநகராட்சி பகுதியில் நிலவுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-----
கட்டுமான துறையில், அனுபவம் உள்ள தன்னார்வலர் ஒருவர், இது குறித்து கருத்து கூறும் பொழுது, பொறியியல் கல்லூரியில் படித்து, கட்டுமானம் பொறியியல், அதாவது Civil Engineering, என்றால் என்ன, என்பதன் அடிப்படை புரிதலே இல்லாமல், போட்டி தேர்வுகள் மூலம் தேர்வாகி, மாநகராட்சி போன்ற, உள்ளாட்சி பொறுப்புகளில், பொறியாளர் பதவிகளில், முன் பணி அனுபவம் இல்லாதவர்கள் அமர்ந்து விடுகின்றனர்.
பதவியில் இருக்கும் பொறியாளர்களுக்கு அடிப்படை புரிதல் இல்லாததால், திட்டம் வகுக்கும் பொழுதே, திட்டங்கள், பொறியியல் அடிப்படையில் பிழைகள் நிறைந்ததாக வகுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சாலை அமைப்பதற்கு முன், இரு மறுங்கிலும், மழை நீர் வடிகால் ஓடை அமைப்பது வழக்கம். ஓசூர் பொருத்தவரை, சாலையில் இருந்து மழை நீர் வடிந்து செல்வதற்கான வழிவகை பெரும்பாலான சாலைகளில் செய்து தரப்படவில்லை. அத்தகைய வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்ட சாலைகளிலும், மக்கள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, மேடை அமைத்து, தண்ணீர் வழிந்து செல்லாதபடி, தடுத்து விடுகின்றனர்.
அதனால், மழை, அல்லது வேறு ஏதாவது ஒன்றினால், சாலையில் விடப்படும் தண்ணீர், வடிகால் ஓடைக்கு வழிந்து செல்லாமல், சாலையிலேயே ஓடி, சாலையை சேதப்படுத்துகிறது.
சாலையை புதுப்பித்தால், பிற மாநகராட்சிகளை பொருத்தவரை, குறிப்பிட்ட நாட்களுக்கு அதில் குழி தோண்டி செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்கு அனுமதி மறுப்பார்கள். சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், அதற்கு முறையான விண்ணப்பத்தை, மாநகராட்சியின் பகுதிக்கான, உதவி பொறியாளரிடம் வழங்கி, அவர் விண்ணப்பத்தின் அடிப்படையில் மேற்பார்வையிட்டு, சாலையை சீர் செய்வதற்கும் சேர்த்து, குழி தோண்டி பணி செய்ய தேவை உள்ளவரிடம் வசூலிப்பார்கள். ஓசூரை பொருத்தவரை, இத்தகைய நடைமுறை இல்லை. விருப்பத்திற்கு பொதுமக்கள் குழி தோண்டி, அவரவர் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர்.
சாலைகளின் ஓரங்களில் மண்டும் மணலை, அப்புறப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவது இல்லை. அதனால், அவற்றில் செடிகள் வளர்ந்து, சாலைகளை சேதப்படுத்துகின்றன.
குறைந்த அளவு சாலை சேதமடைந்தாலே, அதில், Patch Work செய்து, தொடர்ந்து சாலை பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வந்திருந்தால், இப்போதைய நிலைமை ஓசூருக்கு ஏற்பட்டிருக்காது.
------
இனி வரும் நாட்களிலாவது, ஒப்பந்தம் போட்டோம், சாலை அமைத்தோம் என்றில்லாமல், கட்டுமான பொறியியலில், அடிப்படை அறிவாற்றல் கொண்டவர்களிடம், அறிவுரை பெற்று, ஓசூர் மாநகராட்சி பகுதியில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டால், அது பிற பகுதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, பொதுமக்களின் பாராட்டுதல்களையும் பெறும், என்று கூறினார்.
எல்லோருக்கும் எல்லாம், என்று முதலமைச்சர் அவர்கள் கூறியது, எல்லோருக்குமான வளர்ச்சி, என்பதை ஓசூர் மாநகராட்சி புரிந்து கொண்டு, எல்லோருக்கும், எல்லா வகை வளர்ச்சியையும் தர வேண்டுமே ஒழிய, தீமைகளை, குறைபாடுகளை, எல்லோருக்கும் எல்லாம், என்று பிரித்து வழங்கக் கூடாது, என்று தன்னார்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.








