Hosur News, ஓசூர் செய்திகள் - கடந்த 25 ஆண்டுகளாக, அவ்வப்பொழுது கேள்விப்படும் செய்திகளில் ஒன்று, ஓசூருக்கான விமான நிலையம்


கடந்த 25 ஆண்டுகளாக, அவ்வப்பொழுது கேள்விப்படும் செய்திகளில் ஒன்று, ஓசூருக்கான விமான நிலையம். அடுத்ததாக, ஓசூர், ஜோலார்பேட்டை இடையேயான இருப்பு பாதை வழித்தடம். மற்றொன்று, ஓசூர், பொம்மச்சந்திரா இடையேயான மெட்ரோ ரயில் திட்டம்.  நமது கேள்வி, ஓசூருக்கு விமான நிலையம் வருமா? வரும். ஆனால் வராது.  அதாவது ஓசூருக்கு 2033 ஆண்டு வரை, ஏர்போர்ட் வருவதற்கான வாய்ப்பே இல்லை ராஜா! விமான நிலையத்தை விடுங்க, மெட்ரோ ரயில் திட்டமாவது ஓசூர் வரை வருமா? பதில்களை தெரிந்து கொள்ளலாம். வாங்க.

தமிழ்நாட்டின் வரி பங்களிப்பில், கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக, திகழ்வது ஓசூர், என்று பலமுறை அரசு நிகழ்ச்சிகளிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு ஒரு நொயிடா என்றால், பெங்களூருவிற்கு ஓசூர்! தவறு செய்த அரசு ஊழியர்களுக்கான பணியிடமாக விளங்கிய ஓசூர், இன்று போட்டி போட்டுக் கொண்டு, பணியிடம் வேண்டி வரும் இடமாக மாறி நிற்கிறது.   

கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசு, தொடர்ந்து ஓசூர் விமான நிலையம் குறித்து, அறிவிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த முறை, வெளியிடப்பட்ட அறிவிக்கை அடிப்படையில், ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளில், விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் எவை என, நாளொரு பொழுதும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. விமானம் நிலையம் என்றாலே, நிலங்கள் கையகப்படுத்துவதும் அதன் அடிப்படை என்பதால், இந்தச் செய்திகள் சிலருக்கு, வயிற்றில் புளி கரைப்பதாகவும், சிலருக்கு பால் பார்ப்பதாகவும் அமைந்துள்ளது.

ஓசூருக்கு விமான நிலையம் வருமா?  என்றால், 2033 ஆண்டுக்குப் பின் வரும். ஏனெனில், பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து, 150 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில், மற்றொரு விமான நிலையம் அமைப்பதற்கு, Ministry of Civil Aviation மற்றும் Bangalore International Airport limited இடையே, போடப்பட்ட ஒப்பந்தம் தடை செய்கிறது. இதனால் ஓசூருக்கு மட்டும் பாதிப்பு என்றில்லை. கர்நாடகாவின் மைசூரு மற்றும் ஹாசான் போன்ற நகர்களுக்கும், விமான நிலையம் அமைப்பதில், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தடை, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2033, ஆண்டு வரை, 2000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் பசுமை விமான நிலையம், அதற்காக 20,000 கோடி ரூபாய் முதலீடு, என்பன போன்ற செய்திகள், தேன் வந்து பாயுது காதினிலே என்ற அளவில், ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்களுக்கு, வருவாய் ஈட்டு விதத்தில் அமையுமே தவிர, தொழில்துறையினருக்கு பயன்தராது.

விமான நிலையத்தை விடுங்கள், மெட்ரோ ரயில் திட்டம் ஓசூருக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு, கிடைப்பதற்கான வாய்ப்பு பெருமளவு உள்ளது, என்கின்றன இப்போது வரும் செய்திகள்.

ஏனெனில், தமிழ்நாட்டின் ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பொம்மசந்திரா இடையே திட்டமிடப்பட்டுள்ள, மெட்ரோ ரயில் திட்டம், தென்னிந்தியாவின் முதல் இரு மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டம். ரயில்வே துறையை பொறுத்த வரை அது ஒன்றிய அரசுடையது.  ஆனால் மெட்ரோ ரயில் திட்டம், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இரு மாநிலங்கள் புரிந்துணர்வு கொண்டால் மட்டுமே, அதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஓசூர் பொம்மச்சந்திரா இடையேயான 23 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்டம், பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தினால், விரிவான செயல் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட பின், இதற்கான அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொறுமை கடலினும் பெரிது, என்ற சொல்லுக்கு ஏற்ப, ஓசூரை பொருத்தவரை, பொறுமையே இனிமை.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: