Hosur News, ஓசூர் செய்திகள் - குரல் வளையை கவ்விய சிறுத்தை, பதட்டத்தில் ஊர் மக்கள்

குரல் வளையை கவ்விய சிறுத்தை, பதட்டத்தில் ஊர் மக்கள்.  ஓசூரை அடுத்த, அஞ்செட்டி காட்டுப் பகுதியில், மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டின் குரல்வளையை, குட்டியுடன் நடமாடும் சிறுத்தை கடித்து குதறிய நிலையில், ஊர் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  

ஓசூரை சுற்றி பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதிகள் நிறைந்துள்ளது.  இந்த காடுகளில், காட்டு யானைகள், சிறுத்தைகள், உடும்புகள், காட்டு எருமைகள், மான்கள், மயில்கள், என பல்வேறு விதமான காட்டு விலங்குகள், ஏராளமாக வாழ்ந்து வருகின்றன.

சூளகிரி மற்றும் சுற்றுவட்டார காடுகளில், சிறுத்தைகள் அவ்வப்பொழுது மேய்ச்சலுக்கு ஆடு மாடுகளை அழைத்துச் செல்பவர்களை தாக்குவதும், அவர்கள் ஓட்டிச் சென்ற கால்நடைகளை, உணவாக வேட்டையாடி செல்வதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.  அதேபோன்று, தேன்கனிக்கோட்டை பகுதி காடுகளிலும், அவ்வப்பொழுது கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் பொழுதும், வீடுகளில் பட்டி தொட்டியில் அடைத்து வைத்திருக்கும் பொழுது, சிறுத்தைகள் இழுத்துச் செல்வதும் வாடிக்கை.

கடந்த சில நாட்களாகவே, ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சிக்கு உட்பட்ட சன்னத் குமார் நதிக்கரை பகுதி, அண்ணியாழம் காட்டுப்பகுதி, சூளகிரி அடுத்த புலியரசி ஊர் அருகே உள்ள காட்டுப் பகுதி, என பல்வேறு பகுதிகளில், மேய்ச்சலுக்கு காட்டுப்பகுதிக்கு, கால்நடைகளை ஓட்டி செல்லும் மக்கள், குட்டியுடன் கூடிய சிறுத்தைகள் நடமாடுவதாக தெரிவித்து வருகின்றனர்.  

வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக, காட்டுப்பகுதிகளில், கூர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகின்றனர்.  பல்வேறு இடங்களில், கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அஞ்செட்டி அடுத்த கடுகு நத்தம் அருகே உள்ள மலைப்பகுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தசரதன் என்பவரது ஆட்டை, கடந்த நாள் சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றதாம்.  அவர் மற்றும் அவரது மனைவி முனியம்மா கூச்சலிடவே, சிறுத்தை, ஆட்டின் குரல் வளையை லேசாக கடித்து விட்டு, விட்டு சென்றதாம்.

குரல் வளையில் கடிபட்ட ஆட்டை, மீட்ட இருவரும், ஆட்டை அஞ்செட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி மருத்துவம் பார்த்து அழைத்துச் சென்றனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: