Hosur News, ஓசூர் செய்திகள் - பெஞ்சல் புயல், சென்னையை கடந்து இப்பொழுது எங்கே நிலை கொண்டு உள்ளது?

பெஞ்சல் புயல், சென்னையை கடந்து இப்பொழுது எங்கே நிலை கொண்டு உள்ளது?  வங்கக் கடலில் உருவான, பெஞ்சல் புயல், கடலூர், புதுச்சேரி இடையே கரையைக் கடந்து, ஓசூர் வழியாக கர்நாடகாவின், அரபிக் கடல் கடற்கரை நோக்கி பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

கடந்த நவம்பர் இருபத்து மூன்றாம் நாள், வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, கடந்த இருபத்து ஆறாம் நாள் தன்னை வலுப்படுத்திக் கொண்டது.  புயல் என்ற நிலையை, கடந்த இருபத்து ஒன்பதாம் நாள் வரை எட்டாமல், இங்கும், அங்குமாக போக்கு காட்டி வந்தது.  பின்னர், புயலாக மாறி, பெஞ்சல் புயல் என்ற பெயரைப் சூட்டிக் கொண்டது.

அதன் பின், மெல்ல மெல்ல நகர்ந்து, வானிலை ஆய்வாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி, முப்பதாம் நாள் பகலில், மரக்காணம் அருகே உள்ள கடல் பகுதியில், நிலை கொண்டிருந்தது.  அதன் கால் பகுதியை, கடல் பிடித்து வைத்திருப்பதால், புயலால் நகர முடியவில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

கடலுக்கும் புயலுக்குமான இழுபறி, புதுச்சேரி இடையே நடைபெற்றதால், புதுச்சேரியில் பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டது.  கடலுக்கும் புயலுக்குமான சண்டை நிறைவடைந்து, சுமார் ஐநூற்று பத்து மில்லி மீட்டர் மழையை, திண்டிவனம் பகுதிக்கு கொட்டியது.  

நேற்று, டிசம்பர் ஒன்றாம் நாள், மாலை ஏழு மணி அளவில், செஞ்சியை கடந்து, ஓசூரை நோக்கி, தனது பயணத்தை துவங்கியது. இன்று பகல் ஒரு மணி அளவில், ஓசூர் பகுதியில் பெரு மழை பொழியும் என்றும், அதன் பின் மழையளவு குறைய தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  

கடந்த முப்பது ஆண்டுகளில் கண்டிராத பெருமழையை, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் பொழிந்து, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் தென்கர்நாடக பகுதியை கடந்து, அரபிக் கடல் நோக்கி, பெஞ்சல் புயல் பயணிக்கிறது.

இதற்கு முன், இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டில், வர்தா புயல், சென்னையில் கரையை கடந்து, ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொண்டது. இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் துவங்கிய நிலையில், வர்தா புயல் முதல் முறையும், அடுத்ததாக இரண்டாயிரத்து இருபத்தி நான்கில் பெஞ்சல் புயல் ஓசூர், வழியாக கர்நாடகா பயணிக்கிறது.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: