ஓசூர் தெருக்களில் சுற்றித் திரியும், தெரு நாய் ஒவ்வொன்றுக்கும், ரூபாய் ஆயிரத்து அறுநூற்று ஐம்பது செலவிடும் ஓசூர் மாநகராட்சி. ஆயிரத்து முன்னூறு நாய்களுக்கு, கடந்த மார்ச் முதல், இதுவரை ரூபாய் இருபத்தியோரு லட்சத்து ஐம்பதாயிரம் செலவு செய்தும், தெரு நாய் இனப்பெருக்கத்தை, கட்டுப்படுத்த இயலாமல் திணறும், ஓசூர் மாநகராட்சி. ஏன் இந்த அவல நிலை?
ஓசூர் நகர் முழுவதும் சுற்றித் திரியும் பல்லாயிரக்கணக்கான நாய்களில், இதுவரை சுமார், ஆயிரத்து முன்னூறு நாய்களுக்கு, ABC எனப்படும் கருத்தடை அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாய்க்கும் ரூபாய் ஆயிரத்து அறுநூற்று ஐம்பது செலவு செய்து மேற்கொண்டதாக, ஓசூர் மாநகராட்சியால் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
பிராணி மித்திரன் என்கிற தன்னார்வ அமைப்பு, இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக, ஓசூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
தெரு நாய்களைப் பிடித்து செல்வதற்கு, இப்போது ஒரு வண்டி மட்டுமே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேற்கொண்டு, ஒரு வண்டி வாங்குவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்பொழுது உள்ள கட்டமைப்பில், 60 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை மேற்கொள்ளப்பட்டு, அவற்றை ஒரே நேரத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இதற்காக, 100 நாய்கள் அளவிற்கு, ஒரே நேரத்தில் கையாளும் வகையில், டைட்டான் தொழிற்சாலை அருகே உள்ள ஆனந்த நகர் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
முன்பெல்லாம், SPCA என்கிற, அரசு சார்புடைய அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ், இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, குறிப்பாக ஓசூரை பொறுத்தவரை, தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை மருத்துவர்கள், SPCA தொடர்பாக எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாததால், தனியார் தொண்டு அமைப்புகள், இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதாக, விலங்கு நலனில் அக்கறை கொண்ட தன்னார்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் மேலும் குறிப்பிடும் பொழுது, கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக, SPCA தொடர்பான வரவு செலவு கணக்குகள், முறையாக வைத்திருக்கவில்லை என தெரிவித்தனர். அதனால், ஒன்றிய அரசின் மேற்பார்வையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கும் SPCA கிருஷ்ணகிரி, பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாமல் SPCA அமைப்பு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
SPCA மூலமாக, நாய்களுக்கான கருத்தடை மேற்கொள்ளப்பட்டால், மாவட்ட நிர்வாகத்தின் பண உதவி பங்களிப்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ள நிலையில், மாநகராட்சி தனது வரிப்பணத்தில், செலவினங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.








