Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர், கிருஷ்ணகிரி புயல் மழையும், மழை ஓயும் நேரத்தில், அரசியல் தலைவர்களின் தொடர் வருகையால்

ஓசூர், கிருஷ்ணகிரி புயல் மழையும், மழை ஓயும் நேரத்தில், அரசியல் தலைவர்களின் தொடர் வருகையால், பரபரப்பாகி போன, கிருஷ்ணகிரி மாவட்டம்.

பொதுவாக புயல் என்றால், கடக்கும் பகுதிகளை, தனது வேகமான காற்றினால், புரட்டி போட்டு விட்டு செல்லும். ஆனால் இந்த ஆண்டு ஓசூர் நோக்கி வந்த புயல், ஒவ்வொரு ஊராக நின்று விளையாடி, மழையை கொட்டோ கொட்டு என்று கொட்டி விட்டு சென்றுள்ளது.  புயல் காற்றினால் ஏற்பட்ட பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில், பெரு மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

ஓசூரை கடந்து சென்ற புயல், இப்போது கர்நாடக கடற்கரை ஓரம் அரபிக் கடலில் தனது புதிய ஆட்டத்தை துவங்கி உள்ளதாக வானிலை ஆய்வாளர்களின் ரேடார தரவுகள் தெரிவிக்கின்றன.  

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு நேரில் வந்து,  சந்தித்து நல உதவிகள் வழங்கினார்.  

அவர்களுக்கு உடனடி தேவையான உணவு பொருட்கள், ஆடைகள், பிஸ்கட், போர்வைகள், மற்றும் மருந்து பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் உரையாற்றிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உறுதியாக செய்து கொடுப்போம் என்று கூறினார். உடன் மாநில அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் Y பிரகாஷ், மதியழகன், உள்ளிட்டோர் இருந்தனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, நேரில், மக்களோடு மக்களாக நடந்து சென்று ஆய்வு செய்தார்.

நேரில் ஆய்வு செய்த பின் ஊடகவியலாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,

ஊத்தங்கரை பரசன் ஏரி நிரம்பி வெளியேறிய புயல் மழை வெள்ளத்தால், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை, டிராவல்ஸ் மற்றும் சொகுசு கார்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை, அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு, தமிழக அரசு தகுந்த உதவித்தொகை வழங்க வேண்டும்.

இந்திய வானிலை ஆய்வு நடுவம், கிருஷ்ணகிரிக்கு ரெட் அலர்ட் விடுத்தும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. சேதமடைந்த விளைநிலங்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி,கே பி அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ்செல்வம் மற்றும் ஏராளமான அதிமுக தலைவர்கள் உடன் இருந்தனர்,



Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: