அ தி மு க மாநிலங்களவை உறுப்பினர் முனைவர் மு தம்பிதுரை, விவசாயிகளின் உரிமைக்கு குரல் கொடுக்க தவறி விட்டாரா? இழப்பீடு வழங்குவது ஒன்றிய அரசின் பொறுப்பு அல்ல, அது கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியரின் கடமை என குறிப்பிட்டு, நிலம் இழந்தவர்களை, மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாரா தம்பிதுரை அவர்கள்?
அ தி மு க மாநிலங்களவை உறுப்பினரும், நாடாளுமன்ற உறுதியளிப்பு குழுவின் தலைவருமான, தம்பிதுரை அவர்கள், இன்று ஓசூரில் சுமார் 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக, ஊடகவியலாளர்களிடம், S T R R திட்டத்திற்கு நிலம் கொடுத்த, ஓசூர் பகுதி மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, கருத்துரை வழங்கினார்.
S T R R திட்டம் ஒன்றிய அரசினுடையது, சாலை அமைப்பதும் ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறை, என்று விளக்க உரை வழங்கினார், நாடாளுமன்ற உறுதியளிப்பு குழுவின் தலைவர் முனைவர் தம்பிதுரை. இழப்பீடு தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்த அவர், கர்நாடக பகுதியில் நிலம் ஒப்படைத்தவர்களுக்கு விருந்து, தமிழ்நாட்டில் நிலம் இழந்தவர்களுக்கு சுண்டல் வழங்குவது போன்று, இழப்பீடு வழங்கும் முறை, நீதிக்கு புறம்பாக உள்ளது, என எடுத்துரைத்தார்.
ஓசூர் பகுதியில் நிலம் இழந்தவர்களுக்கு, குறைவான இழப்பீடு வழங்குவது தொடர்பாக, தாம் ஒன்றிய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரியிடம் எடுத்துரைத்ததாகவும், கூடுதலான இழப்பீடு, சாலை அமைப்பதற்கு நிலத்தை இழந்தவர்களுக்கு வழங்குவது, ஒன்றிய அரசின் பொறுப்பு அல்ல என்று நிதின் கட்கரி தம்மிடம் தெரிவித்து விட்டதாக குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, தாயுள்ளம் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தான், ஓசூர் பகுதியில், S T R R சாலை அமைப்பதற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, கர்நாடகாவில் நிலம் கொடுத்தவர்களுக்கு ஒப்பான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும், என மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கினார்.
தம்பிதுரை அவர்களின், இழப்பீடு தொடர்பான பேச்சை கேட்டு தெரிந்து கொண்ட, ஓசூர் பகுதியில் நிலம் இழந்த ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல், ஓசூர் ஆன்லைனிடம் கருத்து கூறும் பொழுது, S T R R சாலை அமைப்பதற்கு, நிலம் இழந்தவர்களுக்கான இழப்பீட்டை, அரசியல் செய்யாமல், முறையாக, முயற்சிகள் மேற்கொண்டு, சரியான இழப்பை, கர்நாடகா பகுதியில் வழங்கியவர்களுக்கு போன்றே, ஓசூர் பகுதி மக்களுக்கும் வழங்க வேண்டும் என வேதனையுடன் குறிப்பிட்டார்.








