இருக்கும் நீர் நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதிய கால்வாய் திட்டம் அமைப்பதாக கூறி, பயன்பாட்டில் உள்ள விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என, ஓசூர் பகுதி விவசாயிகள், ஓசூர் சார் ஆட்சியரிடம் வலியுறுத்தினார்கள். புதிய கால்வாய்கள் அமைத்து, தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை, தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள தூள் செட்டி ஏரிக்கு கொண்டு செல்ல புதிய கால்வாய் திட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், விவசாயிகள், ஓசூர் சார் ஆட்சியரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, ஓசூர் அருகே உள்ள ஆலியாளம் ஊரில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையின், வலதுபுற கால்வாயில் இருந்து 8 கிமீ தொலைவிற்கு, விவசாய பாசனத்திற்காக, ஏற்கனவே தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நீரை, புதிய கால்வாய்கள் அமைத்து, தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ள தூள் செட்டி ஏரிக்கு கொண்டு செல்ல, புதிய கால்வாய் அமைப்பதற்கான திட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது. 25 கிமீ தொலைவு கால்வாய் அமைக்கப்பட உள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த, ஓசூரை அடுத்த ராமாபுரம், பாத்த கோட்டா, யாகனப் பள்ளி, கனிஞ் சூர், அகரம், தேவ சானப் பள்ளி, கன்ன சந்திரம் மற்றும் தொட்ட திம்மனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில், அங்குள் எண்ணூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து, அரசின் சார்பில் 126 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் திட்டத்திற்கு வேளாண்மை விவசாயிகள் நல சங்கம் சார்பில், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த நாள், திங்கள் கிழமை, ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வேளாண்மை விவசாயிகள் நல சங்கத்தினர், இந்த திட்டத்தை கால்வாய் மூலம் கொண்டு செல்லாமல், மாற்று பாதையில் குழாய்கள் அமைத்து தண்ணீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல இந்த திட்டத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நிலங்களை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்காவிடம் மனு அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.








