ஓசூரில் தீராத தெரு நாய்களின் தொல்லை, இரவில் பணி முடித்து செல்வோரை, விரட்டி விரட்டி தாக்கும் தெரு நாய்கள். பொறுமையுடன் செயல்படும் மாநகராட்சி. தெரு நாய் தொடர்பாக எப்படி கையாள்வது என்று, தன்னார்வு தொண்டர்கள் குழப்பம். ஓசூர் தெருநாய்களின் தொல்லைக்கு தீர்வுதான் என்ன?
அதாவது ஒவ்வொரு ஓசூர் மாநகராட்சியின் வார்டு பகுதிக்கும் 1000 தெரு நாய்கள் என்ற தோராயமான கணக்கு அடிப்படையில், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 45 ஆயிரம் தெரு நாய்களின் எண்ணிக்கை இருக்கும் என, மக்களிடையே பொதுவான கருத்து உள்ளது.
ஓசூர் மாநகராட்சியை பொருத்தவரை, சுமார் 1300 தெரு நாய்களுக்கு, கருத்தடை மருத்துவம் செய்ததாக, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் செலவானதாக எழுதி வைக்கப்பட்டு இருக்கும் தொகை, ரூபாய் 21 லட்சம்.
இது தொடர்பாக தன்னார்வலர் ஒருவர் கருத்து கூறும் பொழுது, ஆறு மாதங்களுக்கு பத்து குட்டிகள் என்று ஈனும் தெரு நாய்களுக்கு, நாய் ஒன்றிற்கு ரூபாய் 1650 வீதம், 1300 நாய்களுக்கு ரூபாய் 21 லட்சம் செலவு என்றால், 45 ஆயிரம் நாய்களுக்கும் கருத்தடை செய்வதற்கு, சுமார் ரூபாய் ஆறு கோடி தேவை என குறிப்பிட்டார். அதிலும், அத்தனை நாய்களுக்கும், ஒரே நேரத்தில் கருத்தடை செய்தால் மட்டுமே, இந்த செலவினத்தின் பலன் கிடைக்கும் என குறிப்பிட்டார். அதனால், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது என்பது, தேவையற்ற செலவினம். ஐரோப்பிய நாடுகள் உட்பட பிற நாடுகளில் பின்பற்றும், நடைமுறையான, தெரு நாய்களை கொல்வதே, குறைந்த செலவிலான, நீண்ட நாட்களுக்கான தீர்வு, என விளக்கிச் சொன்னார்.
தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தன்னார்வ அமைப்புகள், மற்றும் அமைப்பு சாரா தனிநபர்கள், நாய்களின் நடவடிக்கை காண உரிமையும் எடுத்துக்கொண்டு, அவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், என பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் கருத்து கூறினர்.
மற்றொரு தன்னார்வலர் ஓசூர் ஆன்லைனிடம், ஓசூர் தெரு நாய் தொல்லை தொடர்பாக கருத்து பகிர்ந்த பொழுது, தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள், தெருவில் நாய்களை அலைய விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பகுதியில் தெரு நாய் ஒன்று காணப்பட்டால், அது யாருடைய பொறுப்பில் உள்ளது என்பதை அறிந்து, அவர் உரிமம் பெற்று, அத்தகைய தெரு நாயை, தமது அரவணைப்பில் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். உரிமம் பெற்ற தெரு நாய்களுக்கு அடையாளமாக, ஒளிரும் தன்மை கொண்ட கழுத்து பட்டை, அணிவித்து வைத்திருந்தால், எளிதில் அடையாளம் காணலாம், என்று குறிப்பிட்டார்.
யாரும் உரிமை எடுத்துக் கொள்ளாத தெருநாய்களை, திடல் போன்ற ஒரு இடத்தில், கருத்தடை செய்து, மாநகராட்சியின் பொறுப்பில் அடைத்து வைத்து பாதுகாத்தால், விரைவாக ஓசூர் மாநகராட்சி பகுதியிலிருந்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தலாம், என்று கூறினார்.
மேலும், வீட்டில் உள்ள மீதமாகும் உணவுப் பொருட்களை, தெருவில் வீசி செல்வதும், அல்லது அத்தகையவற்றை குப்பை மேடுகளில் விட்டுச் செல்வதும், தெரு நாய்களின் உணவு தேவைக்கு முதன்மை ஆதாரமாக திகழ்கிறது. ஆகவே, குப்பைகளை தெருவில் வீசி செல்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை, மாநகராட்சி கடுமையான தண்டத்தொகை விதித்து தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தெரு நாய் தொல்லை தொடர்பான ஓசூர் பொதுமக்களின் குரல், ஓசூர் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரின் காதுகளில் ஒலிக்குமா? மக்களுக்கு தீர்வு கிடைக்குமா? ஆவலுடன் காத்திருக்கும் ஓசூர் பொதுமக்கள்.








