ஓசூர் வழக்கறிஞர் கண்ணன், திடீரென பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றம். கடந்த நவம்பர் 20ஆம் நாள், உடன் பணியாற்றிய பெண் வழக்கறிஞரின் கணவர் அருவாளால் தாக்கியதில் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த வழக்கறிஞர் கண்ணன், பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஓசூர் ரங்கசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் 30 வயதுடைய கண்ணன். இவர் ஓசூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். நவம்பர் 20 பிற்பகல் ஒரு மணி அளவில், யாரும் எதிர்பாராத வகையில், வழக்கறிஞர் கண்ணனை, பெண் வழக்கறிஞர் முப்பத்தி மூன்று வயதுடைய சத்தியவதி என்பவரது கணவர், 39 வயதுடைய ஆனந்தகுமார் வீச்சருவாளால், நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கினார்.
படுகாயம் அடைந்த கண்ணனை, உடன் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் முதலுதவி கொடுத்து, பின்னர் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சுமார் 25 நாட்களாக சிறப்பு மருத்துவ கவனிப்பில் இருந்த, கண்ணன், விரைவாக உடல் நலம் தேறி வரும் நிலையில், பிசியோதெரபி உள்ளிட்ட, நாளது செயல்பாடுகளை மீட்டெடுக்கும் சிறப்பு மருத்துவத்திற்காக, பெங்களூரு மருத்துவமனையில் உள்ள மறுவாழ்வு நடுவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, யாரும் கவனிக்காத வகையில், கடந்த நாள் விடிகாலை பொழுதில், மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூரு மருத்துவமனையின், சிறப்பு மறுவாழ்வு நடுவத்தில், அவருக்கு பழைய நினைவுகள் வருவதற்கும், பேச்சு மற்றும் நடைபயிற்சி தேவையான மருத்துவம் வழங்கப்படும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








