Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் அருகே, ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர்.

ஓசூர் அருகே, ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர்.  ஓசூர் எல்லையான, ஆனெக்கல் வட்டத்திற்குட்பட்ட பெஸ்தமனஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர், லோகி.  இவர் ஆனைக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தம்முடன் ஒரு குழுவை அமைத்து, சமூகத்திற்கு தீங்கிழைக்கும் பல செயல்களை செய்து வந்தார். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த ரவுடி மனோஜ் என்பவர் மீது, லோகியின் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடிகள் இடையே மோதல் குறித்து ஜிகினி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவுடி லோகியையும், அவரது கூட்டாளிகளையும் தேடி வந்தனர். 

இந்த நிலையில் மாயச்சந்திரம் என்ற பகுதியில், ரவுடி லோகி பதுங்கி இருக்கும் தகவல் ஜிகினி காவல்துறையினருக்கு கிடைத்தது.  அதை தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர் மஞ்சுநாத் தலைமையில் காவல் படையினர், ரவுடி லோகியை கைது செய்ய முயன்ற போது, லோகி காவல்துறையினர் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் மஞ்சுநாத், தன்னையும் தனது காவல்துறை படையினரையும் காக்கும் விதமாக, ரவுடி லோகி மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் லோகியின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. காலில் துப்பாக்கி குண்டினால் காயமடைந்த லோகியை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

காயமடைந்த லோகியை காவல் துறையினர், பெங்களூருவில் உள்ள புனித ஜான் மருத்துவமனையில், மருத்துவ உதவிக்காக சேர்த்துள்ளனர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வினவி வருகின்றனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: