ஓசூர் முதல் புதுச்சேரி அருகே உள்ள கடலூர் வரை தென்பெண்ணை ஆற்றின் வழியாக படகு போக்குவரத்துக்கு வாய்ப்பு உள்ளதா? தென்பெண்ணை ஆற்றை, பாலாற்றுடன் இணைக்கும் திட்டம், நீர்வழிப் போக்குவரத்திற்கு தடையாக அமைகிறதா? ஆறுகள் இணைப்பும், அறிவியல் பின்னணி சொல்வதும் என்ன? படகு போக்குவரத்திற்கு, தென்பெண்ணை ஆறு ஏற்புடையதா?
கர்நாடக மாநிலம், பெங்களூர் அருகே உள்ள, நந்தி மலையில் துவங்கும் தென்பெண்ணை ஆறு, ஓசூர் வழியாக, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் ஒரு அணையும், அடுத்ததாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் எல்லையில் ஒரு ஆணையும், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் அணை என பல அணைக்கட்டுகளை கடந்து, கடலூர் அருகே கடலில் இணைகிறது. ஒவ்வொரு ஆண்டும், தென்பெண்ணை ஆற்றின் சுமார் மூன்று புள்ளி ஐந்து TMC தண்ணீர், வீணாக கடலில் கலப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
2008ஆம் ஆண்டு முதல், தென்பெண்ணை ஆற்றை பாலாற்றுடன் இணைக்க வேண்டும், என்கிற கோரிக்கை இருந்து வருவதால், ஓசூர் முதல், கடலூர் வரையிலான, நீர்வழிப் பாதை அமைக்கும் திட்டம், அரசின் பார்வையில் இல்லாமல் போய்விட்டது. நீர்வழிப் பாதை அமைக்கப்பட்டால், கடலூர் துறைமுகத்தின் பயன்பாடு, ஓசூருக்கு நேரடியாக கிடைக்கும். மேலும், கடலூர் முதல் பெங்களூர் வரையிலான, சரக்கு போக்குவரத்தும் தடையின்றி நடைபெறும் என்கின்றனர், இது தொடர்பில் ஆர்வம் காட்டும் தன்னார்வலர்கள்.
பொதுவாக நீர்வழிப் பாதை போக்குவரத்து, உலகம் முழுவதும் கால்வாய்களில் சிறப்புடன் நடந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றை பொறுத்தவரை, ஏற்கனவே குறிப்பிட்ட தொலைவிற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதை நீட்டித்து, கடலூர் வரை அமைத்தால், வழிப்பாதைகளில், தொழில்துறை பொருளாதார வளர்ச்சி மட்டும் இன்றி, விவசாயத்திற்கு தேவையான நீர், ஆண்டு முழுவதும் கிடைப்பதற்கான வழிவகை ஏற்படும், என பொறியாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில், நீர்வழிப் போக்குவரத்து என்கிற கோரிக்கை எழுகின்ற சூழலில், பாலாறு, தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை 2015ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் வருவாயிலிருந்து, நிறைவேற்றிக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், பல்வேறு சூழல்களால், திட்டம் எவ்வித அறிவிப்பு இன்றி, கடந்த 10 ஆண்டுகளாக, கைவிட்ட நிலையில் முடங்கி கிடக்கிறது.
தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர், துரைமுருகன் அவர்கள், ஆறுகள் இணைப்புத் திட்டத்தை மீட்டெடுத்து, வரும் நிதியாண்டில், இதற்கான பணம், ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து, நெடுங்கல் அணைக்கு, நாட்றம்பள்ளி கொட்டாறு வழியாக, காக்கங்கரை ஏரி மூலமாக, தண்ணீரை விடுவதற்கான புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக, நீர்வளப்பிரிவு உயர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம், 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலம், பாசன வசதி பெறும். ஒன்றரை லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி ஏற்படும். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதியான, சென்னை பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி பலனடையும் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.
ஆறுகளை இணைத்து, மக்களுக்கு குடிநீர் மற்றும் விளைநிலங்களுக்கு தண்ணீர் ஏற்படுத்தி கொடுக்க அரசு திட்டம் வகுக்குமேயானால், அதை வரவேற்போம். ஆறுகள் இணைப்பு திட்டம் இல்லை எனில், ஓசூர் முதல் புதுச்சேரி அருகே உள்ள கடலூர் வரையிலான நீர்வழிப் பாதை அமைப்பது குறித்து, அரசு உடனடியாக கவனம் செலுத்தி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் தன்னார்வலர்கள்.
ஏதாவது ஒரு வகையில் நன்மை நடக்கட்டும். பொறுத்தார் பூமியாள்வார், என்பதற்கு ஏற்ப, பொறுத்தருள்வோம்.








