ஓசூரில் அரசு மாளிகை, சமூக விரோதிகள் புகலிடம்? ஓசூர் ராயக்கோட்டை சாலை பகுதியில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறைக்கு உரித்தான பயணியர் மாளிகை உள்ளது. இதன் அருகில், வருவாய்த்துறை ஆய்வாளர் அலுவலகம், திரையரங்கு மற்றும் அரசு பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதனால் சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர், அடிக்கடி வந்து செல்லும் இடமாக இப்பகுதி விளங்கி வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், பயனியர் மாளிகை வளாகத்திற்குள் நுழைந்த உடனேயே, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் என பெயரிடப்பட்டுள்ள கட்டிடத்தில், பலரும் மது அருந்தும் காட்சிகளும், மது புட்டிகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ள காட்சிகளும், காண்போரை அதிர்ச்சி அடைய செய்கிறது. அருகிலேயே அரசு பள்ளி இயங்கும் சூழலில், சிறுவர் சிறுமியர் காணும் வகையில், சிலர் அரசு அலுவலக வளாகத்தில் மது அருந்துவதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும், பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்களில் ஒருவர், ஓசூர் ஆன்லைனிடம் கருத்து கூறும் பொழுது,
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை, பயணியர் மாளிகை வளாகத்தில் உள்ள, அரசு கட்டிடம், மது அருந்துவதற்கும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும், சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது, வேதனை அடைய வைக்கிறது. அருகிலேயே பிற அரசு அலுவலகங்கள் செயல்படும் சூழலில், அரசு உயர் அலுவலர்கள், இத்தகைய சமூக விரோத செயல்பாடுகளை, கண்டும் காணாமல், அலட்சியப் போக்கை காட்டுவது, அருகில் அமைந்திருக்கும் பள்ளி செல்லும் சிறார்களை, தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கும் என வேதனை தெரிவித்தார்.
சமூக ஆர்வலர், முனீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த வனவேந்தன் எம்மிடம், அலுவலர்கள், குறிப்பாக உயர் பதவியில் இருப்பவர்கள் வந்து தங்கி செல்லும் இந்தப் பகுதியிலேயே, இது போன்ற சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகள் நிகழ்ந்தேறும் நிலை இருப்பது, பொதுமக்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்துகிறது, என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்த கட்டிடத்தில், உதவி கோட்ட செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், என பெயரிடப்பட்டுள்ள. இந்தப் பயன்பாடற்ற, நல்ல நிலையில் உள்ள கட்டிடத்தை, முறையாக பாதுகாத்து, வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால், இங்கு முறையற்ற செயல்கள் நடைபெறுவதை, எளிதாக தடுக்கலாம். வாடகை கட்டடங்களில் இயங்கும், பிற அரசு அலுவலகங்களை இங்கு மாற்றினால், அரசு தனது செலவினங்களையும் கட்டுப்படுத்தலாம், என அவர் தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பான துறை அலுவலர்கள், உடனே போதிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அலட்சிய போக்கால் கைவிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தின் அருகே வந்து செல்லும் பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த அரசு வளாகத்தை தூய்மையாக வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.








