ஓசூரில் மூன்று இளம் பெண்கள் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பிச் சென்ற கார்! ஓசூர் அருகே, மின்டா நிறுவனத்தில் பணி புரியும், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் மீது, பின்புறம் வேகமாக வந்த கார், பயங்கரமாக மோதி விட்டு, நிற்காமல் தப்பிச் சென்றதால், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, பி செட்டிபள்ளி ஊர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கார் மோதியதில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த, இரு பெண்கள், படுகாயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தனர். இந்த கார் மோதலில் சிக்கிய, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண், அஸ்மிதா குமாரி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பெற்று வருகிறார்.
இந்த மூன்று பெண்களுடன், சேர்ந்து நடந்து வந்த, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த, 21 வயது கரண் சித்தார், லேசான காயங்களுடன், ஓசூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
மிண்டா நிறுவனத்தில், பணி முடிந்து, மாலையில் தங்களது இருப்பிடம் நோக்கி, நடந்து வந்த நால்வர் மீதும், பின்புறமாக மோதிய கார், நிற்காமல், தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. கார் மோதியது குறித்து அறிந்த கெலமங்கலம் காவல் நிலைய, காவல்துறையினர், நிகழ்விடத்தில், நேரில் வினவி வருகின்றனர். காரால் மோதி, உயிர்பலி ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளம் பெண்களுடன் பணி புரிந்து வருபவர்கள், இறந்த பெண்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு நின்றவர்களின் கண்களை, ஈரம் அடையச் செய்தது.








