ஓசூரில், காவல்துறையை மீறி கட்டப்பஞ்சாயத்து செய்யும் கும்பல்? ஓசூர் காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? ஓசூர் கட்டப்பஞ்சாயத்து கும்பல் கைது செய்யப்படுமா? தெரு நாய்களை காப்பாற்றுகிறோம் என்கிற போர்வையில், ஓசூரில் கும்பல் ஒன்று, ஓசூர் அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த தனி மனிதர் ஒருவரை மிரட்டி, மன்னிப்பு கடிதம் பெற்று, அவரை ஒரு முக்காலியில் உட்கார வைத்து, மன்னிப்பு காணொளி பதிவு செய்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தங்களது அடாவடியை மேற்கொண்டுள்ளதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஓசூர் காவல்துறையை மீறி, இத்தகைய கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கும்பல், உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர், ஓசூர் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுகிறார்.
மிருக வதை தடுப்புச் சட்டம், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது, மிருகங்களை, மனிதர்களின் கொடூரங்களில் இருந்து பாதுகாக்க, இந்திய அரசு குற்றவியல் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை, முறையாக மாநிலங்களால் அமல்படுத்த இயலவில்லை என்பதால், Blue Cross, பீட்டா போன்ற உலகளாவிய அமைப்புகள், இந்திய சட்டங்களில் தலையிட்டு, இந்திய மிருகங்களுக்காக வழக்காடி வந்தன. இவற்றிற்கு மாற்றாக, S P C A, அதாவது Society for Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வலர்கள் கொண்ட அமைப்பை, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில், சங்கங்களாக பதிவு செய்து, மிருக வதை தடுப்புச் சட்டத்தை, நடைமுறையில் அமல்படுத்தி, மிருகங்களை காக்க வேண்டும் என ஒன்றிய அரசு திட்டமிட்டு, அதற்கான, வழிமுறைகளை, இரண்டாயிரத்து ஓராம் ஆண்டில் வகுத்துக் கொடுத்தது.
S P C Aவின் முதன்மையான பணி, விலங்குகளை, அதை வளர்ப்பவர் உள்ளிட்ட யாராவது, கொடூரமான அல்லது கொடுமையான வகையில் கையாண்டால், அத்தகைய மிருகங்களை காப்பாற்றுவது. அத்தகைய பாதிக்கப்பட்ட மிருகங்களை கையகப்படுத்திக் கொள்ளும் உரிமையும் S P C Aவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், கிருஷ்ணகிரி S P C A அமைப்பு, தனது வரவு செலவு கணக்குகளை மற்றும் ஆண்டறிக்கையை, ஒன்றிய அரசு வகுத்து கொடுத்துள்ள நடைமுறைகளின் படி, முறையாக அரசிடம் சமர்ப்பிக்காமல், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக, அந்த அமைப்பை நன்கறிந்தவர்கள் ஓசூர் ஆன்லைன் இடம் தெரிவிக்கின்றனர்.
விலங்குகளுக்கு எதிராக குற்றம் இழைத்ததாக, குற்றம் சாட்டப்படும் மனிதர்களை கையாள்வதை பொறுத்த வரை, அது முழுக்க முழுக்க, காவல்துறையின் கடமை. எந்த சட்டமும், காவல்துறையை மீறி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரத்தை, வேறு எந்த அமைப்பிற்கும் வழங்கவில்லை, என தெளிவாக எடுத்துரைக்கிறார், சென்னையைச் சேர்ந்த, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் எட்வின்.
வழக்கறிஞர் எட்வின், ஓசூர் ஆன்லைன் இடம் தனது கருத்தை மேலும் பதிவு செய்த போது, தனிமனிதர்களை, குழுவாகச் சென்று, மிரட்டி மன்னிப்பு கடிதம் பெறுவது, முக்காலியில் உட்கார வைத்து, காணொளி பதிவு செய்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவது, போன்ற நடவடிக்கைகள், காவல் துறையை மீறிய கட்டப்பஞ்சாயத்து, என்றே கருதப்பட வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் நாதன், எம்மிடம் தனது கருத்தை பதிவு செய்த பொழுது, ஏற்கனவே, மனித உரிமை சங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் என்கிற போர்வையில், ஏராளமான கட்டப்பஞ்சாயத்து குழுக்களை தமிழ்நாடு கண்டுள்ளது. அத்தகைய கும்பல்களை தடை செய்வதற்காக, தனியாக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டது. இதுபோன்ற, காவல்துறையின் செயல்பாட்டை மீறிய, தனித்தனி கட்டப்பஞ்சாயத்து அனுமதிக்கப்பட்டால், இது காவல்துறையே கட்டப் பஞ்சாயத்திற்கு உட்படுத்தும் சூழ்நிலையை ஏற்படுத்தலாம். ஆகவே, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறையினர் கடுமையான, கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது போன்ற கட்டப்பஞ்சாயத்துக்கள், மீண்டும் ஓசூரில் நிகழாதபடி, தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.








