ஓசூரில் சிறுத்தை பிடிபட்டது எப்படி? பிடிபட்ட சிறுத்தையை, வனத்துறையினர் என்ன செய்யப் போகிறார்கள்? சுமார் முப்பதற்கும் மேற்பட்ட ஆடுகள், ஊர் பகுதிகளில் சுற்றித்திரிந்த பல தெருநாய்கள் என ஏராளமான விலங்குகளை, வேட்டையாடி உண்டு கொழுத்த ஆண் சிறுத்தை பிடிபட்ட நிலையில், அதன் பெண் இணைகள் எங்கே? மீண்டும், வேட்டைக்கு வருமா சிறுத்தை?
பிடிபட்டுள்ள ஆண் சிறுத்தைக்கு, சுமார் நான்கு வயது இருக்கும் பொழுது, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள, அடவிசாமிபுரம் எனும் ஊரின் மலைக்குன்றின் மலை முகட்டில், தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது. குன்றின் உயரத்திலிருந்து, அடிவாரப் பகுதிகளில், மனிதர்களின் நடமாட்டத்தையும், மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளையும், சுற்றித் திரியும் நாய்களையும், சிறுத்தை கூர்ந்து கவனித்து, தன் பசிக்கு ஏற்ப வேட்டையாடி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது. இப்போது, வனத்துறையினரின் கணக்கின்படி அதற்கு ஆறு வயது.
தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு, நாளது பொழுதும், சிறுத்தையின் நடமாட்டம் குறித்தும், அது வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி செல்வதால் ஏற்படும் இழப்புகள் குறித்தும், பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். வனத்துறையினர், சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை, மேற்கொண்டனர். அது பிடி கொடுக்காமல், அதன் போக்கிற்கு வேட்டையாடி வாழ்ந்து வந்தது.
இந்நிலையில் அதன் சேட்டை, உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்கும் இளைஞர் ஒருவர், தமது 30 ஆட்டை, அந்த சிறுத்தை வேட்டையாடி விட்டதாக தேன்கனிக்கோட்டை வன அலுவலகத்தில், போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்கு, கூண்டு ஒன்றை ஏற்பாடு செய்து, முழு ஆட்டை உள்ளே வைத்து, நடுகாட்டிற்குள் வனத்துறையினர் வைத்தனர். ஆட்டை, ஆட்டைய போடும் நோக்கில், சிறுத்தை கூண்டுக்குள் நுழைந்த நிலையில், ஆட்டோடு சேர்ந்து அது மாட்டிக்கொண்டது.
கிரேன் உதவியுடன், மலைப்பகுதியில் இருந்து, சிறுத்தையை, கூண்டோடு வனத்துறையினர் எடுத்து வந்தனர். இதைக் காண ஏராளமான ஊர் மக்கள், கூடி நின்றனர்.
பிடிபட்ட சிறுத்தையை, என்ன செய்யப் போகிறார்கள் என வனத்துறையினரிடம் ஓசூர் ஆன்லைன் சார்பில் வினவிய போது, பிடிபட்ட சிறுத்தையை, அவற்றின் வழக்கமான இருப்பிடமாக கருதப்படும் காட்டுப் பகுதியில், குறிப்பாக அடர்ந்த காட்டுப்பகுதியில், விடுவிப்போம் என தெரிவித்தனர். சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார, அடர்ந்த காட்டுப் பகுதிகளில், சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம், என்பது குறிப்பிடத்தக்கது.








