Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் இது முதல் முறை! நட்ட நடு இரவில்... Government Doctor!!!

ஓசூரில் இது முதல் முறை! நட்ட நடு இரவில், யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகள் நடமாடும் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு, மருத்துவக் குழுவினரோடு, வீட்டிற்கே சென்று, குழந்தை பிறப்பிற்கு மகப்பேறு மருத்துவம் பார்த்த அரசு மருத்துவர். 

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே, தேவன் தொட்டி ஊரைச் சேர்ந்த தொழிலாளி மாதேவன்.  இவரது மனைவி, இருபத்து மூன்று வயதுடைய ஆனந்தி. இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், ஏற்கனவே மூன்று வயதில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 

இரண்டாவது குழந்தைக்கு கருவுற்றிருந்த ஆனந்தி, மகப்பேறுக்காக, தனது தாய் வீடான, தொழுவபெட்டா பழையூர் எனும் ஊரில் தங்கியிருந்தார்.  அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஊரை சென்றடைய, கெலமங்கலத்தில் இருந்து, பல மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். 

இந்நிலையில், கடந்த நாள் இரவு பதினொன்றரை மணியளவில், மகப்பேறுக்கான வயிற்று வலி, ஆனந்திக்கு ஏற்பட்டது.  இத்தகவல் கெலமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் குமார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

கெலமங்கலத்தில் இருந்து, ஆம்புலன்ஸ், நடுக்காட்டு பகுதியில் அமைந்துள்ள ஊருக்கு சென்று, ஆனந்தியை அழைத்துக்கொண்டு, மீண்டும் கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு பல மணி நேரம் எடுக்கும்.  மருத்துவ சூழ்நிலையை புரிந்து கொண்ட, அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் குமார், தனது மருத்துவ குழுவுடன், நட்ட நடு இரவில், யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகள் நடமாடும், நடுக்காட்டில் அமைந்துள்ள ஊருக்கு நேரில் விரைந்து சென்று, ஆனந்தியின் வீட்டிலேயே, மகப்பேறு மருத்துவம் பார்த்தார்.  

குழந்தை, இரவு பனிரெண்டரை மணி அளவில் பிறந்தது.  பிறந்த குழந்தையின் எடை இரண்டாயிரத்து எழுநூறு கிராம் இருந்துள்ளது.  பின்னர், தாயையும் குழந்தையையும், தனது காரில் அழைத்துக் கொண்டு மருத்துவர் ராஜேஷ் குமார், அவர்கள் இருவரையும், உனிச்சட்டி அரசு துவக்க நிலை நல வாழ்வு நடுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு முதலுதவி வழங்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

நள்ளிரவு நேரத்தில் பலவகையான காட்டு விலங்குகள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு நேரில் வந்து, மருத்துவம் பார்த்ததோடு மட்டுமல்லாது, தமது வண்டியிலேயே, தாயையும் சேயையும் மருத்துவ உதவிக்காக, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, காப்பாற்றிய மருத்துவர் ராஜேஷ் குமாருக்கும், அவரது மருத்துவ குழுவினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: