Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூருக்கு, ஜெயலலிதா அம்மையார் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டம் கிடைக்குமா?

ஓசூருக்கு, ஜெயலலிதா அம்மையார் நூற்று பத்து விதியின் கீழ் அறிவித்த திட்டம் கிடைக்குமா?  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில், பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஓசூர் வெளிவட்டச் சாலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை, இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு வெளியிடப்பட்டது.  திட்டத்திற்காக, நூற்று இருபத்தி நான்கு கோடி ரூபாய், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்டது.  நெடுஞ்சாலைத் துறையிடம் ஒதுக்கப்பட்ட தொகை, கடந்த ஏழு ஆண்டுகளாக, பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. 

இந்த பதினெட்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட ஓசூர் வெளிவட்டச் சாலை, மாநிலத்தின் எல்லையான சூசூவாடியில் துவங்கி, அணுமே பள்ளி அக்ரஹாரம், பேகேப்பள்ளி, நல்லூர், எழுவபள்ளி, சின்ன கொள்ளு, பெத்த கொள்ளு, ஆலூர், மோரணப்பள்ளி, வழியாக பேரண்டபள்ளி வரை அமைக்க திட்டமிடப்பட்டது. 

ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, அரசாணை வெளியிடப்பட்டு, சாலை அமைப்பதற்கான பணமும் ஒதுக்கப்பட்ட நிலையில், சாலை அமைப்பதற்கான அளவிடும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல், வெளியாகி உள்ளது.  ஒரு சில இடங்களில் மட்டும், இந்த வெளிவட்டச் சாலை, இன்னும் உயிருக்கு ஊசலாடிய நிலையில் உள்ளது என்பதை நினைவுபடுத்தும் விதமாக, ஆங்காங்கே, கற்கள் நடப்பட்டு, நினைவுச் சின்னங்களாக காட்சி அளித்து வருகின்றன. 

இந்தச் சாலை பணிக்காக, சுமார் நூற்று இருபது ஏக்கர் நிலம், கையகப்படுத்தப்பட வேண்டிய சூழலில், அதுவும் இன்னும் முழுமை பெறாமல், இழப்பீடுகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. 

ஜெயலலிதா அம்மையார் இந்த வெளிவட்டச் சாலை திட்டம் அறிவித்த போது, ஓசூரில் நிலங்களின் விலைக்கும், இன்றைய சந்தை மதிப்பீட்டு விலைக்கும், எள்ளளவும் பொருந்தாத நிலை உள்ளது.  ஆகவே, இத்திட்டம் குறித்து மறு மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்டு, ஓசூரில் நகர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, விரைவாக, இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என, தொழில் முனைவோரும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

ஏற்கனவே, அமைக்கப்பட்ட உள் வட்டச் சாலை, இன்று முழு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  S T R R மற்றும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், நிறைவேற்றப்பட வேண்டிய, ஓசூரின் கட்டாய தேவைகளில் ஒன்றான, வெளிவட்டச் சாலை, திட்டத்தை நடைமுறைப்படுத்த, சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும், என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: