Hosur Metro Train, கற்பனையில் இருந்த திட்டம், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும்! ஓசூர் இரண்டாயிரத்து நாற்பத்து ஆறாம் ஆண்டு வரையிலான வளர்ச்சி மற்றும் நகர் வடிவமைப்பு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
ஓசூர் நகர் வடிவமைப்பு திட்டம், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சுமார் நாற்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஏற்கனவே மூன்று முறை முயற்சிக்கப்பட்டு, திட்டம் வெளியிடப்படாமல் முடங்கிய நிலையில், இப்போது இரண்டாயிரத்து நாற்பத்து ஆறாம் ஆண்டு வரையிலான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியில், ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம், குறித்து ஆராயலாம் வாங்க!
மக்களின் அடிப்படைத் தேவை, பொது போக்குவரத்து. ஓசூர் சாலைகளின் நெரிசலை குறைக்க வேண்டுமாயின், மெட்ரோ ரயில், சேட்டிலைட் பேருந்து நிலையங்கள், அகலமான சாலை வசதி, நகர்ப்புறத்தை இணைக்கும் புறநகர் ரயில்வே திட்டம், ஆகியவற்றை உள்ளடக்கியதாக தான் இருக்க இயலும்.
ஓசூர், மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மையாக திகழ்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில், ஓசூரின் வளர்ச்சி, பல மடங்காக உயர்ந்துள்ளது. ஓசூர் முதல் பாகலூர், பேரிகை, வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, சூசூவாடி, என அதன் எல்கையை விரிவுபடுத்தி பறந்து விரிந்து வளர்ந்துள்ளது. ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் ஓசூர், அதற்கு ஏற்ப மக்கள் தொகையும் பெருகி வருகிறது. அடிப்படை கட்டமைப்புகள் போதுமான அளவில் இல்லாததால், பல சாலைகள், குறுகிய சாலைகளாக அமைந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன.
வாய்வழிப் பேச்சில் இருந்த, ஓசூர் பெங்களூரு இடையேயான மெட்ரோ ரயில் பாதை திட்டம், இப்போது, அரசின், ஓசூருக்கான இரண்டாயிரத்து நாற்பத்து ஆறாம் ஆண்டு வரையிலான வளர்ச்சி திட்டத்தில் இடம் பிடித்துள்ளதால், விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம். ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், அத்திப்பள்ளி வழியாக, மெட்ரோ இருப்புப் பாதை, சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, ஓசூர் நகர், பத்தலப்பள்ளி, சிப்காட் இரண்டு வரை முதல் கட்டமாக அமைக்கப்பட இருக்கிறது. இரண்டாவது திட்டத்தின் கீழ், ஓசூர் நகர் பேருந்து நிலையம் அருகில் துவங்கி, பாகலூர் சாலையில் உள்ள எல்காட் தொழிற்பேட்டை வரை அமைய இருக்கிறது. மக்களின் கோரிக்கை வலுப்பெறுமேயானால், இந்த வழித்தடம், பாகலூர் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.








