ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் குழந்தைகள் மீதான பாலியல் அத்து மீறல்கள்! இதற்கு பொறுப்பு, ஒழுக்கமற்ற ஆசிரியர்களா அல்லது காவல்துறையினரின் மெத்தன போக்கா அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தயங்கும் அரசு அதிகாரிகளா? ஒரு பார்வை.
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பிந்தைய, சுமார் மூன்று ஆண்டுகளில், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. அது தொடர்பான புகார்களின் அடிப்படையில், போக்சோ வழக்குகள் பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
பர்கூரில், போலி என்சிசி முகாம் நடத்தி, 12 வயது மாணவி மீது பாலியல் அத்துமீறல் நடத்தப்பட்டது துவங்கி, ஓசூரில் 11 வயது மாணவி மீது, பள்ளி பயிலும் மூன்று மாணவர்கள் பாலியல் அத்துமீறல், என சிறுமியர் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் தொடர்பான குற்ற நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெரும்பாலான நிகழ்வுகளில், குற்றம் நடைபெறும் பொழுது, சிறார்கள், கூச்சலிட்டு உதவிக்கு ஆட்களை அழைப்பதில்லை. தங்கள் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் நடைபெற்றதை, குழந்தைகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனித்து பெற்றோர்களும் அறிந்து கொள்வதில்லை. நாட்கள் கடந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட பின், மருத்துவர்கள் கூறி, பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் அவல நிலை நிலவுகிறது. அதன்பின் காவல்துறையினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் பெற்றோர்களால் புகார்கள் கொடுக்கப்படுகின்றன.
இத்தகைய குற்ற நிகழ்வுகளில், சிறார்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, குற்றம் வெளியில் உடனடியாக வராமல் மறைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு சிறுமி மீதான பாலியல் அத்துமீறல் நிகழ்வில், துணிச்சல் மிக்க பெண்ணாக மாற வேண்டும் என்றால், இத்தகைய பாலியல் ஈடுபட வேண்டும் என அச்சிறுமி மூளைச்சலவை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் அத்துமீறல் நடைபெற்றுள்ளது.
போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், இத்தகைய குற்றங்கள், நடைபெறுவதன் பின்னணி குறித்து, ஓசூர் ஆன்லைன் சார்பில் தன்னார்வலர் ஒருவரிடம் வினவிய போது,
பெரும்பாலான குடும்பங்களில், பொருளாதாரத் தேவைக்காக, குழந்தைகளின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. தங்களை தங்களது குழந்தைகள், தொல்லை கொடுக்கக் கூடாது என, கைபேசிகளை குழந்தைகளிடம் விளையாட கொடுப்பது, மற்றும் தொலைக்காட்சி பார்க்க முழு நேரம் அனுமதிப்பது என பெற்றோர் சிலர், தவறான வழிகளை பின்பற்றி விடுகின்றனர்.
நாடு முழுவதும் நடைபெறும் கள்ளக்காதல் முதற்கொண்டு அனைத்து விதமான பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் அலசி ஆராயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, குழந்தைகளுடன் சேர்ந்து, வீட்டில் பேசக்கூடாத, குழந்தைகள் காதால் கேட்க கூடாத சொற்றொடர்களை, தொலைக்காட்சி என்ற பெயரில், நட்ட நடு வீட்டில் வைத்து, பார்த்து கேட்டு ரசிக்கிறார்கள்!
மேலும், இணைய இணைப்புடன் கூடிய கைபேசிகளை, குழந்தைகளிடம் கொடுத்து விடுகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்கு புரிதல் இல்லாத நிலையில், இணையத்தில் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ, பார்த்த அத்தனை காட்சிகளையும் குழந்தைகள் பார்ப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.
பெற்றோரின் அனுமதியின்றி, குழந்தைகள், instagram, whatsapp, facebook என தங்களுக்கு தாங்களே சமூக வலைதளங்களில் பதிவு செய்து, முன் பின் அறியாத பெரியவர்கள் உடனான நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். பெற்றோரால் தடுக்கப்பட வேண்டிய இத்தகைய நட்பு வட்டாரம், தேவையற்ற காணொளிகளை குழந்தைகளுக்கு அனுப்புவதற்கும், உரையாடுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. அதனால் குழந்தைகள் மனதளவில் பாதிப்படைந்த நிலையில் வாழ்கின்றனர்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி, நேரம் ஒதுக்கி உரையாடி, நெருங்கிய அன்புடன் கூடிய நட்பை வழங்கினால் மட்டுமே குழந்தைகள் தங்கள் மீதான குற்றங்களை, தாங்களே தடுக்கும் துணிவு ஏற்படும்
தமிழ்நாடு அரசு, பள்ளி குழந்தைகளுக்கு, பாலியல் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, பெற்றோர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தி, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான நேரங்களில், ஆசிரியர்களும் இத்தகைய குற்ற நிகழ்வுகளை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, அவர்களுக்கும், குற்றத்தை மறைத்தால், சட்டப்படியான எத்தகைய தண்டனை கொடுக்கப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... என அவர் தெரிவித்தார்.








