ஓசூர் பாகலூர் சாலைக்கு விடிவு காலம் ஏற்பட போகிறது. ஓசூர் பாகலூர் சாலையை சீர் செய்யப் போகிறார்களா? தெரிந்து கொள்ளலாம் வாங்க!
கடந்த ஆறு ஆண்டுகளாக, பழுதுபார்க்கப்படாததால், பாகலூர் சாலை, குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதுடன், பலரது கை கால்களை முறித்து, சிலரின் உயிரையும் காவு வாங்கி, அச்சாலையை பயன்படுத்துவோரின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
சாலைகள் என்று வந்துவிட்டால், அது மூன்று பிரிவுகளை கொண்டதாகவும், நான்கு துறைகளையும் சார்ந்ததாக உள்ளது. முதலாவது வகைச் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகள். இரண்டாம் வகை சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பண உதவி செய்யப்பட்டு, அந்தந்த மாநிலங்களின், தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள். மூன்றாவது வகை, மாநில நெடுஞ்சாலைகள். இவை அந்தந்த மாநில அரசுகள் திட்டம் வகுத்து, மாநில வருவாயில் இருந்து அமைக்கப்படும் சாலைகள்.. நான்காவது வகை, உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள். அவை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஓசூர் பாகலூர் சாலையை பொருத்தவரை, இது இரண்டாவது வகையைச் சார்ந்ததாகும். அதாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், பண உதவி வழங்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வருகிற மார்ச் ஏழாம் நாள், சமத்துவபுரத்தில் இருந்து, ஓசூர் பேருந்து நிலையம் வரையிலான பாகலூர் சாலையின் மேம்படுத்தப்படாத மூன்று கிலோமீட்டர் சாலை, முதல் கட்டமாக பதினாறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்த கோரிக்கை, டெண்டர், வரும் மார்ச் ஏழாம் நாள் வெளியிடப்பட இருக்கிறது.
பலமுறை, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்பில், சாலையை சீர் செய்து தரக் கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலை தொடர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளைஞர்கள் சிலர், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்து, தங்களது பணத்தில், கடுமையாக பாதிக்கப்பட்ட சாலையின் பகுதிகளை, கான்கிரீட் கலவைகள் கொண்டு நிரப்பி, தங்களால் இயன்ற, பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
விரைவில், கடந்த ஆறு ஆண்டுகளாக, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த, மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கான பாகலூர் சாலை, முதல் கட்டமாக அதை சீர் செய்யும் பணி துவங்க இருக்கிறது.
பாகலூர் சாலையை இப்பொழுது பதினாறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சரி செய்யப்படும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அந்தச் சாலையில் எவ்வித மேம்பாட்டு பணியும் மேற்கொள்ளப்படாது என நெடுஞ்சாலைத்துறை சார்ந்த நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த மூன்று கிலோமீட்டர் நீள சாலை பகுதியை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை, இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம், தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தாக்கல் செய்துள்ளனர். சாலையை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான ஆணை விரைவில் வெளியிடப்படும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








