Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Underground Drainage Phase 1 ஓசூர் பாதாள சாக்கடை திட்டம், எந்தெந்த வார்டு பகுதிகளுக்கு?

ஓசூர் பாதாள சாக்கடை திட்டம், கட்டுமான பணிகள் துவக்கம்!  எந்தெந்த வார்டு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த இருக்கிறது? எந்தெந்த வார்டு பகுதிகள், பகுதியாக பயனடைய இருக்கிறார்கள்?  விடப்பட்டுள்ள வார்டுகளின் நிலை என்ன? எப்பொழுது கட்டுமான பணிகள் முடிக்கப்படும்? போன்ற தகவல்களை இங்கே காணலாம்! 

ஓசூர் மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ஐந்நூற்று எண்பத்தி இரண்டு கோடியே ஐம்பத்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், செயல்படுத்தப்பட உள்ள, புதிய பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான, அடிக்கல் நாட்டு விழா, கடந்த டிசம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் K N நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர சக்கரபாணி, ஆகியோர் பங்கேற்று, பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான, பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தனர். 

இப்போது, பல வார்டு பகுதிகளில் விரைவாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.  ஓசூர் பாதாள சாக்கடை திட்டம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  முதலாவது பகுதி திட்டத்தில், இருபது வார்டுகளில் பாதாள சாக்கடை முழுமையாக அமைக்கப்படும்.  பதினைந்து வார்டுகளில் பகுதியளவிற்கு பாதாள சாக்கடை அமல்படுத்தப்படும். 

இரண்டாவதாக மேற்கொள்ளப்படும் இருக்கும் திட்டத்தில், பகுதியாக முடிக்கப்பட்ட பதினைந்து வார்டுகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும்.  மேலும், விடப்பட்ட பத்து வார்டுகளிலும், பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும். 

முழுமையாக, பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும் வார்டுகள் எவை என பார்க்கலாம்.  

வார்டு எண் ஆறு, ஏழு, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு,  பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது, இருபத்தி ஐந்து, முப்பத்தி ஒன்று, முப்பத்தி இரண்டு, முப்பத்தி மூன்று, முப்பத்தி எட்டு, முப்பத்தி ஒன்பது, நாற்பது, நாற்பத்தி ஒன்று ஆகிய வார்டுகளில், ஓசூர் பாதாள சாக்கடை முதல் திட்டத்தின் கீழ், முழுமையாக அமல் படுத்தப்படும். 

பகுதி அளவுக்கு, பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும் வார்டுகள் எவை என பார்க்கலாம். 

வார்டு எண் நான்கு, ஐந்து, எட்டு, பத்து, இருபது, இருபத்தி ஒன்று, இருபத்தி இரண்டு, இருபத்தி நான்கு, இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது, முப்பது, முப்பத்தி நான்கு, முப்பத்தி ஐந்து, நாற்பத்தி இரண்டு ஆகிய பகுதிகளில் பகுதி அளவிற்கு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும். 

இந்த முப்பத்தி ஐந்து வார்டுகளுக்கான கழிவு நீரை, ஏற்றுவதற்கு என்று,  பதினொன்று நீர் இரைப்பான்கள், ஆங்காங்கே திட்டமிடப்பட்ட இடங்களில் நிறுவப்படும்.  இங்கே சேகரிக்கப்படும் கழிவுநீர்கள், ராமநாயக்கன் ஏரி மற்றும் சாந்தாபுரம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே தூய்மைப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும்.  தூய்மையாக்கப்பட்ட நீர் வெளியேற்றப்படும். 

சாக்கடையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் திடக்கழிவுகள் எங்கே கொண்டு செல்லப்படும் என, ஓசூர் ஆன்லைன் இடம் தகவல் எதுவும் இல்லை. இந்தத் திட்டம் முழுமையாக நிறைவு பெற, மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது.

ராமநாயக்கன் ஏரியில் அமைக்கப்படும் சாக்கடை நீர் தூய்மைப்படுத்தும் நிலையம், நாளொன்றுக்கு, இருபது மில்லியன் லிட்டர் Twenty M L D, கையாளும் திறன் கொண்டதாக செயல்படும்.

சாந்தாபுரம் ஏரியில் அமைக்கப்படும் சாக்கடை நீர் தூய்மைப்படுத்தும் நிலையம், நாளொன்றுக்கு, பன்னிரண்டு மில்லியன் லிட்டர் Twelve M L D, கையாளும் திறன் கொண்டதாக செயல்படும். 

அந்திவாடி விளையாட்டு அரங்கம் பின்புறம் உள்ள அரசு நிலத்தில், ஓசூர் பாதாள சாக்கடை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான, குடியிருப்பு பகுதி, கட்டுவதற்கான வேலைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டமாக, முன்னூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில், முழுமையாக விடப்பட்ட பத்து வார்டுகளிலும், பகுதியாக விடப்பட்ட பதினைந்து வார்டுகளிலும், பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடிக்கப்படும்.  

ஓசூர் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் பொழுது, மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால் மேம்படும்.  இதனால் மழை நேரங்களில் சாலைகளில் தேங்கும் தண்ணீர் கட்டுப்படுத்தப்படும்.  குடியிருப்பு பகுதிகளில், குறுகலான சாலைகளின் அகலம் முழுமையாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.  மக்கள் நலன் மேம்படும்.  ஓசூர் மாநகராட்சி, உண்மையான மாநகராட்சியாக தரம் உயர்வதற்கான ஒரு சிறப்பு படி நிலையை அடையும். 

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: