Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் விமான நிலையம் எங்கே அமைய இருக்கிறது? அறிவிப்பு, வெளிவர இருக்கிறது. Hosur Airport Latest News

ஓசூர் விமான நிலையம் எங்கே அமைய இருக்கிறது என்பது குறித்து, முதன்மையான அறிவிப்பு, வருகிற மார்ச் இறுதிக்குள் வெளிவர இருக்கிறது.  தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஓசூரில் விமான நிலையம் அமைத்தே தீருவது என்கிற மனநிலையையும், அதற்கான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது!

தமிழ்நாடு அரசு, முதல் கட்டமாக ஓசூரின் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் ஐந்து இடங்களை விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களாக அடையாளம் கண்டது.  அதில் இரண்டு இடங்கள், கள ஆய்வு மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டன. 

ஓசூர் தளி சாலையில் அமைந்துள்ள, பெலகொண்டபள்ளி ஊர் அருகே, Taneja Aerospace and Aviation Limited, சுருக்கமாக தால், என்கிற நிறுவனம் அமைந்துள்ள பகுதி சார்ந்த  பகுதிகள்.  இப்பகுதியை தமிழ்நாடு அரசு முதன்மையாக கருதுவதாக கூறப்படுகிறது. 

இரண்டாவது வாய்ப்பாக, சூளகிரி, ராயக்கோட்டை இடையே, அமைந்துள்ள உலகம், எனும் ஊர் அருகில் உள்ள பகுதி.

ஓசூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பான கள ஆய்வு செய்யும் பொறுப்பை, Airport Authority of India விடம், தமிழ்நாடு அரசு ஒப்படைத்து இருந்தது.

இந்திய விமான நிலைய ஆணையம், தமிழ்நாடு அரசு தேர்வு செய்திருந்த,  தால் மற்றும் உலகம் பகுதிகளில் தனது கள ஆய்வை முடித்து, தமிழ்நாடு அரசிடம், ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த தனது ஆய்வு அறிக்கையை, மார்ச் திங்களில், வழங்க இருக்கிறது. 

இந்த ஆய்வறிக்கையில், விமான போக்குவரத்திற்கு தேவையான வான்வெளி, அருகில் ஏதாவது ராணுவ கட்டுமானங்கள் உள்ளனவா?,  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களில், தமிழ்நாடு அரசு முதன்மையாக எதை தேர்வு செய்ய வேண்டும், போன்ற முழு தகவல்களை அடங்கிய ஆய்வு அறிக்கை இந்திய விமான நிலைய ஆணையம் தாக்கல் செய்ய உள்ளது. 

ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெற்ற பின், தமிழ்நாடு அரசு சார்பில், எந்த இடத்தை தேர்வு செய்வது என்பது குறித்து, மார்ச் இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.  அதன் பின், தமிழ்நாடு அரசிடம் எவ்வளவு நிலம் உள்ளது, எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும், அதற்கு தேவைப்படும் முதலீடு குறித்த, திட்டங்கள் மேற்கொள்ளப்படும். 

ஓசூரில் இருந்து நாளொன்றுக்கு பெங்களூரு விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரத்திற்கும் மேல் என தரவுகள் தெரிவிக்கின்றன.  

கடந்த ஜூன் திங்கள் இருபத்தி ஏழாம் நாள், முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஓசூர் விமான நிலையம் அமைந்தால், விமான நிலையத்தை, ஆண்டொன்றிற்கு சுமார் மூன்று கோடி மக்கள் பயன்படுத்துவர் என தெரிவித்திருந்தார். இந்த விமான நிலையம் ஒற்றை ஓடுதளம் கொண்டதாக இருக்கும். 

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசிய, பயணிகள் விமான போக்குவரத்து துறையின் ஒன்றிய அமைச்சர் ராம மோகன், இரண்டாயிரத்து முப்பத்தி மூன்றாம் ஆண்டு வரை,  பெங்களூர் விமான நிலையம் அருகே, நூற்றி ஐம்பது கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு விமான நிலையம் அமைப்பதில்லை என்கிற ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, இந்திய ஒன்றியம், தமிழ்நாடு அரசு மற்றும் Bangalore International Airport Limited ஆகியவை, ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார். 

ஓசூர் வந்திருந்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் T R B ராஜா, ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என அழுத்தமாக குறிப்பிட்டு பேசினார்.

ஓசூர் சுமார் ஐநூறு பெரிய தொழிற்சாலைகளுக்கும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு-குறு தொழிற்சாலைகளுக்குமான தொழில் நகரமாக விளங்கி, வேகமான வளர்ச்சி பாதையில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: