சுமார் ஓர் ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தொடர்ந்து தங்களது கோபத்தை வெளிக்காட்டியதன் விளைவாக, ஆட்சியாளர்கள், பாகலூர் சாலையை சரி செய்வது என முடிவெடுத்து, அதற்கான பணிகளை நாளை, அதாவது மே 19 நாள் முதல், துவங்க இருக்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தன்னார்வலர் சுபாஷ் அவர்கள், விண்வெளியில் இருந்து விண்வெளி வீரர்கள், சீனப்பெருஞ்சுவற்றிற்கு அடுத்ததாக, பாகலூர் சாலையின் குண்டு குழிகளை பார்க்கலாம் என கிண்டலாக தெரிவித்தார். வேற்று கோள்களில் வாழும் உயிரினங்கள் ஏதாவது பூமிக்கு வந்தால், பாகலூர் சாலையின் குண்டு குழிகளை பார்த்துவிட்டு, பூமி கடுமையான மேடு பள்ளங்கள் கொண்டது எனவும், தாங்கள் வாழ இது ஏற்புடையது அல்ல எனவும் கருதி மீண்டும் தப்பித்து ஓடிவிடும் என தொடர்ந்தார்.
கிண்டல்களும், நக்கல்களும், மீம்ஸ்களும் ஒருபுறம் இருக்க, பாகலூர் சாலையில் தொழில் முனைபவரும், தன்னார்வலருமான சங்கர் அவர்கள், ஓசூர் ஆன்லைனிடம் பேசும் பொழுது, இந்த சாலையை போக்குவரத்திற்கு மூடுவதால், சாலை பகுதியில் கடை நடத்துபவர்கள் உட்பட அனைத்து தொழில் முனைவோருக்கும் கடுமையான வருவாய் பாதிப்பு ஏற்படும். இதை ஓசூர் மாநகராட்சி கருத்தில் எடுத்து, கமர்சியல் கட்டிடங்களுக்கான வரியில் தள்ளுபடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஓசூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஜி ஆர் டி நகைக்கடை அருகில் துவங்கி, கே சி சி நகர் வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலையை, சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில், சரி செய்ய இருக்கிறார்கள். இந்த சாலை போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதி என்பதால், சாலை பணிகள் மேற்கொள்ளும் போது, அந்த வழியை வழக்கம் போல போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாது.
இந்த மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கான சாலை, மேற்கொண்டு அகலப்படுத்தப்பட போவது இல்லை. சாலையின் இரு மருங்கிலும், மழை நீர் வடிகால் ஓடை அமைக்கப்பட இருக்கிறதாம். இந்த மூன்று கிலோமீட்டர் சாலையில், 4 புதிய சிறிய பாலங்கள் Culvert கட்டப் போகிறார்களாம். இருக்கும் சாலையை முழுமையாக தோண்டி எடுத்துவிட்டு, புதிய சாலையாக அமைக்கப் போகிறார்களாம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, இந்த சாலையில், மேற்கொண்டு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாது என, பொறியாளர் ஒருவர் ஓசூர் ஆன்லைனிடம் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், கடந்த நாள், பாகலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் குறித்து, சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெரிய வண்டிகளை பொறுத்த வரை, பாகலூர் அடுத்த பகுதிகளுக்கு செல்லும் வண்டிகள், அத்திப்பள்ளி அல்லது பேரண்டபள்ளி சென்று, மாற்று பாதையில் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஓசூர் பாகலூருக்கு இடைப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பெரிய வண்டிகள், எந்த வழியை பயன்படுத்த வேண்டும் என இதுவரை விளக்கமாக கூறப்படவில்லை. சூழ்நிலை ஏற்படும் போது தான், தீர்வுகள் கிடைக்கும் என, தன்னார்வலர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இரண்டு சக்கர மற்றும் இலகுரக வண்டிகள், ஓசூரில் இருந்து கே சி சி நகர் நோக்கி எந்த தடங்கலும் இல்லாமல் செல்லலாம். பிற வகை வண்டிகளுக்கு இந்த சாலையை பயன்படுத்த அனுமதி இல்லை. இந்தப் பகுதி, சாலை பணி முடியும் வரை, ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கே சி சி நகர் பகுதியில் இருந்து மீண்டும் ஓசூர் பகுதி நோக்கி வர வேண்டும் என்றால், கே சி சி நகருக்குள் புகுந்து, ஆனந்த நகர், சின்ன எலசகிரி, வழியாக மாரியம்மன் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். இந்த வழிச்சாலை, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி வழியாக வருவதால், இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பானது.
மற்றொரு வழி, விநாயகபுரம் வழியாக அல்லது ஆவலப்பள்ளி அட்கோ வழியாக பஸ்தி சாலையை அடைந்து, தோட்டகிரி வழியாக, ஆலசநத்தம் வழியில், தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்துவதன் பாதுகாப்பு, காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்து அமையும்.
இந்த இரண்டு முதன்மையான மாற்றுப்பாதைகள் தவிர்த்து, ஏராளமான வழிகள் குடியிருப்புகள் வழியாக உள்ளன. பாகலூர் அட்கோ வழியாக, இந்திரா நகர் வழியாக, சபரி கண் மருத்துவமனை வழியாக, என ஏராளமான மாற்று வழிகள், போதுமான அளவில் உள்ளன. அதனால் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வண்டிகள் பயன்படுத்துபவர்களுக்கு, பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படப் போவதில்லை.








