Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Traffic Congestion - Impact on Businesses, ஓசூர் சாலைப்போக்குவரத்து நெரிசல்!

500க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 5000க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான தொழிற்சாலைகளும், இவற்றைச் சார்ந்து இயங்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும், ஓசூரின் வளர்ச்சியை தங்களுக்கானதாகவும், தங்களது பங்களிப்பின் மூலம் ஓசூரின் வளர்ச்சியையும் மேம்படுத்தி வருகின்றனர். 

தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று, மேம்பட்ட சாலை அமைப்பு.  ஓசூரில் ஏராளமான சாலைகள் இருப்பினும், சாலை கட்டுமானங்கள் என்கிற பெயரில் ஏற்படுத்தப்படுகிற சாலை மூடல்களால், தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  இதனால் எத்தகைய பாதிப்பு, இதற்கு என்ன தீர்வு வழங்க வேண்டும் என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

திரையில் காட்டப்படும் இந்த மீம்ஸ், சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.  இது தெளிவாக கிருஷ்ணகிரி முதல் அத்திப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 44ன் இன்றைய சீரழிந்த நிலையை எடுத்துரைக்கிறது.  

இந்த 54 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில், பெங்களூர் எல்லையில் அமைந்துள்ள சூசூவாடி துவங்கி, பேரண்டப்பள்ளி, சப்படி, சுண்டகிரி, சாமல்பள்ளம், மேலுமலை, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி என மொத்தம், ஏழு இடங்களில், பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.  இதில், சாமல்பள்ளம் மற்றும் மேலுமலை ஆகிய பகுதிகளில் வேலை ஓரளவு நிறைவேற்றப்பட்டு, போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

ஐந்து இடங்களில் தேசிய நெடுஞ்சாலை, பாலம் வேலை நடைபெற்று வரும்  இந்தச் சூழலில், மேற்கொண்டு, ஓசூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கின்றது. 

அதேபோன்று, பேரண்ட பள்ளி அருகே, எஸ் டி ஆர் ஆர், சாலைக்காக, தேசிய நெடுஞ்சாலை 44 குறுக்கே,  முழுமையாக பணி துவங்கப்படும் பொழுது, அப்பகுதி, மேலும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக மாறும் என்கின்றனர் தன்னார்வலர்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகளை காட்டிலும், இந்த 54 கிலோ மீட்டர் சாலையை பயன்படுத்துவதற்கு, உயர்ந்த அளவு சுங்கம் பெறப்படுகிறது. 

இவ்வாறு சுங்கம் பெறப்பட்டும், போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திகழ்ந்து வருவது, ஓசூர் பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளையும், பிற தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளது, என தன்னார்வலர் லட்சுமணன் கருத்து தெரிவிக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலை துறையினரால் மேற்கொள்ளப்படும் தேசிய நெடுஞ்சாலை எண் 844, ஆமை வேகத்தில் கட்டுமானம் நடைபெற்று வருவதாலும், பல இடங்களில் பாதி அளவு முடிக்கப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாலும், முழுமையாக அந்த சாலையையும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. 

தேசிய நெடுஞ்சாலைகள் ஒருபுறம் இருக்க, விரைவாக திட்டமிடாததாலும் மற்றும் சாலை அமைப்பது தொடர்பான ஒன்றிய அரசின் கொள்கைகளாலும், ஓசூர் நகருக்குள் செல்லும் முதன்மையான சாலைகளும், மேம்படுத்த இயலாத சூழலில், ஓசூர் நகர் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. 

எடுத்துக்காட்டாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, தளி சாலை, ஓசூர் உள் வட்டச் சாலை சந்திக்கும் பகுதியில், இருப்புப் பாதை மீது மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்தும், திட்டமிடுதல் இல்லாததால், அப்பகுதி போக்குவரத்து நெரிசலால் ஒவ்வொரு நாளும் சிக்கித் தவிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வோர் சோர்வடைந்தும், சரக்குந்துகள் நேரம் கடந்தும் செல்வதால்,  தொழிற்சாலைகள் உற்பத்தி திறன் பாதிப்பையும், பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.  

ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள கீழ்ப்பாலம், ஒவ்வொரு மழைக்கும், தண்ணீர் நிரம்பி, ஓசூர் மக்களுக்கு, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ஓசூர் உள் வட்டச் சாலையின் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலையை விரிவு படுத்த இயலாத நிலையும், இதனால் நிலவுகிறது.

தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள, ராயக்கோட்டை சாலை - அலசனத்தம் சாலை சந்திப்பு, ஓசூர் பேருந்து நிலையம் அருகே பாகலூர் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதி, ஆகியவை ஒவ்வொரு மழைக்கும், தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டு, ஓசூர் பொதுமக்களையும், தொழில் முனைவோரையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது.  

இதுகுறித்து ஓசூர் ஆன்லைனிடம் கருத்து தெரிவித்த தன்னார்வலர் ஒருவர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலை ஓரங்களில் அமைந்துள்ள வடிகால் ஓடைக்கான துவாரங்களை முறையாக பராமரிப்பது இல்லை.  அதனால், தண்ணீர் செல்வதற்கான வழித்தடங்களில் தடை ஏற்பட்டு, சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை ஏற்படுகிறது, என தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை.  பாலத்தின் கட்டுமானத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய மரங்கள், நெடுஞ்சாலை பாலங்கள் முழுவதும் செழித்து வளர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. சாலைகளின் ஓரங்களில் உள்ள மண் திட்டுக்களும் அகற்றப்படுவது இல்லை.  சாலையின் நடுவே, எதிரில் வரும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம் தடை ஏற்படுத்துவதற்கு தடுப்புகள் அமைக்கப்படவில்லை.  சுங்கம் வசூலிப்பதில் இருக்கும் ஆர்வம், முறையாக சாலைகளை பராமரிப்பதில் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

சாலை அமைப்பது அரசுகளின் கடமையாக இருப்பினும், சாலையை பயன்படுத்துவதில், பொதுமக்களுக்கும் சிக்கனம் தேவை என்கின்றனர் சாலை கட்டுமானங்கள் குறித்து நன்கறிந்த வல்லுநர்கள்.  ஓசூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், ஒரே ஒருவர் செல்வதற்காக, நான்கு சக்கர வண்டிகளை பயன்படுத்துவது, சாலை நெரிசலை ஏற்டுத்துகிறது. இதை ஒவ்வொருவரும் புரிந்து, முடிந்த வரை பொது போக்குவரத்து அல்லது இரண்டு சக்கர வண்டிகளை பயன்படுத்த வேண்டும் என, அறிவுரை வழங்குகின்றனர்.

மேலும்  கூறுகையில், பெரிய தொழிற்சாலைகள், தங்களது ஊழியர்களுக்கு, தங்கள் தொழிற்சாலை வளாகம் அருகிலேயே குடியிறுப்புகளை கட்டிக்கொடுக்க வேண்டும்.  இதனால் தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை அழைத்து வரும் செலவுகளும், ஊழியர் பயண சோர்வும் தவிர்க்க இயலும் என்றார்.

அரசுகள், சாலை திட்டங்களை, நீண்ட தொலைவுப்பார்வையுடன் வகுத்து, கட்டுமானங்கள் மேற்கொள்ள வேண்டும்.  தேசிய நெடுஞ்சாலைகளை பொருத்தவரை, அடிக்கடி அவற்றில் கட்டுமானம் மேற்கொள்வது, பல வகைகளில், ஓசூர் தொழிற்துறையினருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டார்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: