கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நேரடி கேள்வி! கடை உங்களது... ஆனா உங்களது இல்ல... ஒரே குழப்படியாக இருக்குதா? ஆமாம் ஐயா, எங்களுக்கும் இதே குழப்படிதான்!
பொது வழங்கல் திட்டத்தின் கீழ், ஓசூரில் இயங்கும் ஆறாம் எண் கொண்ட ரேஷன் கடை குறித்த காணொளி தான் இது.
ஓசூர் உழவர் சந்தை அருகே, மலர் வணிக வளாகம் என்கிற அரசின் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தை, தருமபுரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழுவின் செயலாளர் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். உழவர் சந்தைக்கு நேர் எதிர் புறமுள்ள அலுவலகத்தில், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களை கண்காணிப்பதற்கு என்று, மேற்பார்வையாளர் ஒருவர் முழு நேர பணியில் உள்ளார்.
இந்த வணிக வளாகத்தில், ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்படாமல், கேட்பதற்கு ஆளின்றி, நாளொரு பொழுதும் பாழடைந்து வருகிறது. நாம் குறிப்பிட்ட, ஆறாம் எண் கொண்ட ரேஷன் கடை, இந்த, மலர் வணிக வளாகத்தில், கடை எண் 14 மற்றும் 15 இல் இயங்குகிறது.
வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால், அருகில் அமைந்துள்ள உழவர் சந்தையில் உள்ள, பொதுக்கழிவரையின் கழிவு நீர், இந்த வளாகத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் இந்த வளாகம், மலக்கழிவு நாற்றம், நேரம் பாராத கொசுத்தொல்லை, நச்சு பூச்சிகளாலும் சூழப்பட்டு, வாடிக்கையாளர்கள் வளாகத்தில் உள்ளே வர முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது.
இத்தகைய சூழலில், கடைக்காரர்கள் மற்றும் கடை வாடகைக்கு எடுத்திருக்கும் வாடகைதாரர்கள் எல்லோரும் சேர்ந்து, கூட்டமைப்பு ஏற்படுத்தி, வளாகத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பில், கடை எண் 14 மற்றும் 15 ஆகிய கடைகள், பொது வழங்கல் திட்டத்தின் கீழ் இயங்கும் அரசின் கடைகள் என்பதால், வட்டார வழங்கல் அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு, கூட்டமைப்பின் ஒரு உறுப்பினராக சேரும்படி வேண்டிக் கொண்டோம். தொலைபேசியில் பதிலளித்த அவர், ஆறாம் எண் கடை, தமது கட்டுப்பாட்டில் இயங்கினாலும், கடையை நடத்துவது, கெலமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்றும், அவர்களை உறுபினர் ஆக்கிக் கொள்ள கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் கடையில் இருந்த பணியாளர்களை விணவிய போது, கடை கூட்டுறவு சங்கத்தின் பெயரில் இல்லை எனவும், தாங்கள் உள் வாடகையில் இருப்பதாகவும் கூறினார்கள்.
அரசு கட்டடத்தில் இயங்கும் அரசு சார்பிலான ஒரு கடை, அதே கட்டிடத்தில் ஏராளமாக வாடகைக்கு விடப்பட வேண்டிய கடைகள் இருந்தும், உள் வாடகையில் இயங்க வேண்டிய அவல நிலை ஏன்?
மாவட்ட ஆட்சியராக தாங்கள் இந்த ஆறாம் எண் கடையை ஆய்வுக்கு உட்படுத்துகிறீர்கள் என்றால், கடை உங்களது அல்ல. கடை வேறொருவரின் பெயரில் உள்ளது. அதாவது இந்த இரு கடைகளும் தனியாரின் பெயரில் உள்ளது. கூட்டுறவு சங்கத்தின் பெயரில் இல்லை. அடிப்படையிலேயே முரண்பாடு இருக்கும் சூழலில், இது அரசின் கடையா? அல்லது தனியாருக்கு சொந்தமான கடையா? தனியாருக்கு சொந்தமான கடை என்றால், எதன் அடிப்படையில், பொது வழங்கல் திட்டத்தின் கீழ் இங்கு சரக்குகள் இறக்கி வைக்கப்படுகிறது?
எதன் அடிப்படையில், பயோமெட்ரிக் போன்ற தனி நபர்களின் தரவுகள் அரசுக்கு எள்ளளவும் உரிமை இல்லாத இடத்தில் கையாளப்படுகின்றன? உள்ளூரிலேயே பணி புரியும் ஓசூர் வட்டார வழங்கல் அலுவலருக்கு இது தொடர்பான தகவல் தெரியுமா? உள்வாடைக்கு கடை எடுத்து இருக்கிறீர்கள் என்றால் எதன் அடிப்படையில், அதே கட்டிடத்தில் பல கடைகள் வாடகைக்கு விடப்படாத சூழலில் எடுக்கப்பட்டது?
இது தொடர்பாக ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் வினவிய போது, கடை தனியார் பெயரில் இருப்பதாகவும், உள்வாடைக்கு விடப்பட்டிருப்பது, வாடகை ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும், மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய பொது வழங்கல் கடையே இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவது வியக்கத்தக்கது என்றும், அரசியல் தலையீடுகளைக் கண்டு அஞ்சி நடுங்கி நம்மிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
விடைகளை தேடி காத்திருக்கிறோம் ஐயா.








