ஓசூரில் கட்டப்பட இருக்கும் மூன்று பாலங்கள்! ஓசூர் வளர்ச்சியில் அவற்றின் பங்கு என்ன?
வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் ஓசூர். ஏராளமான சாலை வசதிகள் ஓசூரில் குறுக்கும் நெடுக்குமாக இருப்பினும், மேம்பாலங்கள் போக்குவரத்தை சீர் செய்வதற்கு ஓசூரின் கட்டாயத் தேவையாக உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசு, ஓசூருக்கு மூன்று பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. அவை எங்கு கட்டப்பட இருக்கின்றன, அவை கட்டப்பட்டால், சாலை போக்குவரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த காணொளியில் பார்க்கலாம்.
ஓசூர் உள் வட்டச் சாலை சுமார் 12 கிலோமீட்டர் நீளம் கொண்டது. தேசிய நெடுஞ்சாலை 44, esi மருத்துவமனை அருகே துவங்கும் இச்சாலை, சீதாராம் நகர் மேடு அருகே முடிவடைகிறது. இச்சாலை, ஓசூர் நகரின் முதன்மையான சாலைகளாக கருதப்படும், தளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, தொடர்வண்டி நிலையம் சாலை, ராயக்கோட்டை சாலை ஆகியவற்றை செங்குத்தாக வெட்டி, ஒன்றுடன் ஒன்று இணைத்து, தேசிய நெடுஞ்சாலை 44வுடன் இரு மறுங்கிலும் இணைக்கிறது.
இதனால் சாலை சந்திப்பு பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தமிழ்நாடு அரசு, ராமநாயக்கன் ஏரிக்கரையோரம் முதல் ராயக்கோட்டை அட்கோ கோகுல் நகர் சாலை சந்திப்பு வரையிலான பகுதிக்கு, சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் துவங்கப்பட்டன. ஒன்றிய அரசு சாலை கட்டுமானம் குறித்து வகுத்துள்ள நடைமுறைகளின் படி, ஒரு சாலை கட்டமைக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு அதில் மேற்கொண்டு வளர்ச்சி பணிகள் எதுவும் மேற்கொள்ள இயலாது. அதனால் இந்த மேம்பாலம் திட்டம் முடங்கி கிடக்கிறது. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியில் விரைவாக இதற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த பறக்கும் மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தால், தேன்கனிக்கோட்டை சாலை, தொடர்வண்டி நிலையம் சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.
அடுத்ததாக, தளி சாலை, இருப்புப் பாதைக்கு குறுக்காக, அமைய இருக்கும் ட்ரம்பட் வடிவிலான, மேம்பாலம். இந்த பாலம் கட்டுவதற்கு சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்து வந்தனர். கடந்த பிப்ரவரி திங்கள் வாக்கில், ஊபிளியை தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு இருப்பு பாதை மேலாண்மை, பட்டுப்பூச்சி வளர்ப்பு வளாகம் அருகில் இருந்து துவங்கி, சிஷ்யா பள்ளி வரையில், நேர் பாலம் கட்டுவதற்கு, முடிவெடுத்து அறிவிப்பும் வெளியிட்டது.
ஓசூர் ஆன்லைன் சார்பில் கடந்த மார்ச் திங்களில், வெளியிட்டிருந்த காணொளி மூலம், இந்த இடத்திற்கு ட்ரம்பெட் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம். இதை தொடர்ந்து நமது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்திலும், தென்மேற்கு இருப்புப் பாதை மேலாண்மை இடமும் கோரிக்கை வைத்தார். இப்போது ட்ரம்பெட் வகை மேம்பாலம் கட்டுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், இந்த தளிசாலை, உள் வட்டச் சாலை, இருப்புப் பாதை ஆகியவை சந்திக்கும் இந்த இடத்திற்கு, ட்ரம்பெட் வகை மேம்பாலம் கட்டப்படும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாலம் கட்டுமான பணி நிறைவடைந்தால், இச்சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நீங்குவதோடு, தளி சாலையில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் பெருமளவில் பயனடையும்.
ஓசூர் பத்தலபள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும், ஓசூர் பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. பேருந்துகள் மற்றும் பயணிகள் இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டுமானால், அருகில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் ஒன்று கட்டப்பட வேண்டும். ஓசூர் மாநகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சுமார் ஒன்னே கால் கிலோ மீட்டர் நீளத்திற்கு, மூன்று கீழ் வழி பாதைகளைக் கொண்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்க இருந்தன. இந்நிலையில், ஓசூர் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள, மேம்பாலத்தின் பியரிங் உடைந்ததை தொடர்ந்து, கட்டுமான பணிகள் துவங்குவதை ஒத்தி வைத்துள்ளனர்.
ஐந்து நட்சத்திர ஓட்டல் எதிர்புறம் துவங்கும் இந்த மேம்பாலம், புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் நேர் எதிர்ப்புறம் இரண்டு கீழ் பாதைகளைக் கொண்டதாகவும், பத்தலபள்ளி சந்தைக்கு அடுத்து அமைந்துள்ள, போர்ட் கட்டிடம் அருகே நிறைவடைகிறது. இரண்டாவது சிப்காட்டிற்கு எளிதாகச் சென்று வரும் வகையில், அங்கேயும் பாலத்தின் கீழ் வழி பாதை அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தால், ஓசூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
ஓசூர் வளர்ச்சி, அடுத்தடுத்த தொழிற்பேட்டைகளை புதிதாக தோற்றுவித்து, மென்மேலும் உயரும் என்பது தொடர்கதையாக அமையும்.








