Hosur News, ஓசூர் செய்திகள் - Kelavarapalli Dam water to be purification - Rs 150 crore project!

ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் தென்பெண்ணை ஆற்று தண்ணீரை தூய்மைப்படுத்த, நூற்றி ஐம்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

கெலவரப்பள்ளி அணைக்கு பெங்களூருவின் கழிவுநீர், தூய்மையற்ற நிலையில் வருவதால், வட தமிழகத்தின் நிலத்தடி நீரை பாழ்படுத்தும் நிலை ஏற்படுகிறது என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.  

இந்நிலையில், ஓசூர் ராமநாயக்கன் ஏரி மற்றும் ஓசூரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு, கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீரை, நீர் இரைப்பான்கள் மூலம் வழங்க, தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்து முயற்சிகள் மேற்கொண்டது. 

மாசடைந்த கெலவரப்பள்ளி அணை தண்ணீரை, ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் நிரப்பினால், ஓசூர் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீர் மாசடையும் என தன்னார்வலர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து, கெலவரப்பள்ளி அணை தண்ணீரை ஏரியில் நிரப்பப்படுவது நிறுத்தப்பட்டது.  இதற்கிடையே, தொழிற்சாலைகளும், தண்ணீரை வேண்டாம் என கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனர். 

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகள், தங்களது தண்ணீர் தேவைக்காக, நிலத்தடி நீரை, வெளியில் இருந்து தண்ணீரைக் கொள்முதல் செய்யும் நிலையம் ஏற்பட்டது.  

இதைத்தொடர்ந்து, சிப்காட் மேலாண்மை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, நூற்றி ஐம்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில், தண்ணீரை தூய்மைப்படுத்தும் நிலையத்தை, கெலவரப்பள்ளி அணை அருகே விரைவாக கட்டி வருகிறது.  

முன்பு, நாளொன்றிற்கு, ஒன்று புள்ளி ஐந்து M L T தண்ணீரை கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிப்காட் எடுத்து, தொழிற்சாலைகளுக்கு வழங்கி வந்தது.  

இந்த புதிய தூய்மைப்படுத்தும் நிலையம் கட்டி முடிக்கப்பட்டால், துவக்கத்தில் நாளொன்றிற்கு பத்து எம் எல் டி தண்ணீரையும், அடுத்த 7 ஆண்டுகளில் நாளொன்றிற்கு இருபது M L T தண்ணீர் வரை தூய்மைப்படுத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்க சிப்காட் முடிவு எடுத்துள்ளது. 

இத்திட்டம், மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த, இருபது ஆண்டுகளுக்கு, சிப்காட் மேலாண்மையின் மேற்பார்வையில், அந்நிறுவனம் அனைத்து விதமான மராமத்து மற்றும் பேணுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. 

சூளகிரி பாதையில் சுமார் முப்பத்திரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கும், ஓசூர் பகுதியில், பதினான்கு கிலோமீட்டர் நீளத்திற்கும், குழாய்கள் அமைத்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். 

இத்திட்டத்தின் மூலம், தூய்மைப்படுத்தப்பட்ட தென்பெண்ணை ஆற்று தண்ணீர், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழங்கப்படுவதால், தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்தும் நிலை தவிர்க்கப்படும்.  இதனால் நிலத்தடி நீரின் மட்டம் உயரும்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: