வரும் இரண்டாயிரத்தி இருபத்தி ஆறாம் ஆண்டு, ஜனவரியில், ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி வழியாக, ஜோலார்பேட்டை வரையிலான தொடர் வண்டி இருப்புப் பாதை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மண் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் தகவல்களும், தொடர்வண்டி நிலையங்கள் குறித்த வரைபடங்களும், எந்தெந்த ஊர்கள் வழியாக இருப்புப் பாதை செல்கிறது, எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன என்பது குறித்து ஓசூர் ஆன்லைனுக்கு கிடைத்த தரவுகளை உங்களுடன் பகிர்கிறோம்.
நமது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா அவர்களை நேரில் சந்தித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஓசூர், கிருஷ்ணகிரி வழி, ஜோலார்பேட்டை வரையிலான இருப்புப் பாதை தேவை குறித்து எடுத்துரைத்தார். மேலும், வரைவு திட்டங்கள் ஆயத்தமாக உள்ளதால், உடனடியாக, வழித்தடத்திற்கான அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொழில் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்த நமது நாடாளுமன்ற உறுப்பினர், விரைவில் வரவேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, ஜனவரி திங்கள் முதல் வாரத்திலேயே தாம் வருவதாக ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா உறுதியளித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நீலகண்டன் மற்றும் முனைவர் முகமது அலிமுதீன் மைஜா அக்பர் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சிகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் ஓசூர் ஆன்லைன் வாயிலாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மண் ஆய்வின் அறிக்கையில், எந்தெந்த ஊர்களில், எவ்வாறான தொடர்வண்டி நிலையம் அமைக்க வேண்டும் என்பது குறித்த வரைபடத்தை, ஆய்வு மேற்கொண்டு திட்டத்தை வடிவமைத்துள்ள ப்ரைம் ரயில் இன்ஃப்ரா லேப்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.
ஆய்வறிக்கையின்படி, ஓசூர் திருப்பத்தூர் இடையே புதிதாக அட்டகுறுக்கி, சூளகிரி, சின்னார், பொல்லுபள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், கந்திலி ஆகிய ஊர்களில் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட இருக்கின்றன. இதில் சின்னார் தவிர்த்து பிற ஊர்களில் இரட்டை பாதை கொண்டதாக தொடர்வண்டி நிலையம் இருக்கும்.
இருப்புப் பாதை மற்றும் தொடர்வண்டி நிலையம் அமைப்பதற்காக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் எண்ணூற்று முப்பது ஏக்கரும், திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நூற்று அறுபது ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படும்.
இந்த வழித்தடம், இரண்டு மாவட்டங்களையும், 5 வருவாய் வட்டங்களை இணைப்பதாக அமையும். அமைய இருக்கும் இருப்புப் பாதையின் மொத்த நீளம், சுமார் 93 கிலோமீட்டர். இது மொத்தம் 32 ஊர்கள் வழியாக செல்ல இருக்கிறது. ஓசூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, ஒண்ணல்வாடி, மோரணபள்ளி, தொரப்பள்ளி, சுப்புகிரி, காமன்தொட்டி, நல்லகான கொத்தப்பள்ளி, சாமணப்பள்ளி, திகரசன்னபள்ளி, சூளகிரி, சென்னப்பள்ளி, ஒசனபள்ளி, பிக்கெனபள்ளி, பெல்லம்பள்ளி, கூழியம், சிஞ்சுப்பள்ளி ஆகிய ஊர்கள் கிருஷ்ணகிரிக்கு உட்பட்ட சேலம் கோட்டத்திலும், பெத்த-தாலப்பள்ளி, பைணபள்ளி, கொத்தபெட்டா, கட்டினாயனப்பள்ளி, ஓரப்பம், பள்ளியனபள்ளி, அச்சமங்கலம், பி ஆர் மேடபள்ளி, மல்லப்பாடி, சிகரெல்லபள்ளி ஆகிய ஊர்கள் கிருஷ்ணகிரி உட்கோட்டத்திலும், சின்னகந்திலி, கும்மிடிக்காம்பட்டி, கந்திலி, தோகியம், நரியனேரி, பெரியகாரம், காசிநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள் திருப்பத்தூர் உட்கோட்டத்திலும் அடங்கும்.








