Part - 1
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தொழில்துறை வளர்ச்சியில் போட்டி… தமிழ்நாடு 10,000 ஏக்கர்… கர்நாடக 20,000 ஏக்கர்… உங்கள் போட்டிக்கு நாங்க தான் கிடைத்தோமா? என முத்தாலி பகுதி உழவர்கள் வேதனை.
பில்லியன் கணக்கான மக்கள் தொகை கொண்ட இந்தியா, ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிப்பது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில், அரசு அறிவிக்கும் ஓசூருக்கான வளர்ச்சி திட்டங்களுக்காக, விளைநிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்புகள் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
ஓசூரை அடுத்த முத்தாலி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள், தொன்று தொட்டு வாழ்ந்த வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்படுமோ, என்ற அச்சத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. தங்கள் நிலமும், உழவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
இந்த முழுக் காணொளியில், அந்தக் குரல்களை கேட்போம்.
Part - 2
உள் வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை, எஸ்.டி.ஆர்.ஆர். நெடுஞ்சாலை, வடக்கு வெளிச்சாலை, இணைப்பு சாலைகள் என, ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இதோடு மட்டும் இல்லை!. சிப்காட், சிறப்பு தொழிற்பேட்டைகள் என்ற பெயரில், ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஓசூரை சுற்றி கையகப்படுத்தப்பட்டு விட்டன.
இப்போது, அறிவு சார் வழித்தடம், விமான நிலையம், போர் விமான உற்பத்தி, டி.ஆர்.டி.ஓ, பறக்கும் பொருட்களை கண்காணிக்கும் நடுவம் என பல வளர்ச்சித் திட்டங்கள், ஓசூருக்காக தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களை பகுதி மக்கள் இழக்க நேரிடும்.
இந்த அறிவிப்புகள், ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கும், அரசியல் வாய்ப்பு தேடி அலைபவர்களுக்கும், ஒரு வாய்ப்பாக மாறும் வேளையில், பகுதி உழவர்களுக்கு, ஒரு அச்சுறுத்தலாகவும், ஒரு சவாலாகவும் மாறுகிறது.
Part - 3
நிலம் கையகப்படுத்துதல் என்றாலே, முதலில் கேட்கும் இரண்டு சொற்கள், ‘Guideline Value’ மற்றும் ‘Market Value’.
Guideline Value என்பது, நிலம் வாங்கும் அல்லது விற்கும் போது பத்திரப்பதிவுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டுதல் விலை.
Market Value என்பது, அந்த நிலத்திற்கு உண்மையில் சந்தையில் கிடைக்கும் விலை.
எடுத்துக்காட்டாக, ஓசூரை அடுத்த முத்தாலி பகுதியில், ஒரு ஏக்கர் நிலம் சந்தை விலையில் 5 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஆனால், அரசு வழிகாட்டுதல் விலை, சில லட்சங்களில்தான் உள்ளது.
இதன் விளைவு என்ன?
நிலம் கையகப்படுத்தப்படுவதாக அரசு அறிவிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட விலையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த விலையின் மூன்று மடங்கு இழப்பீடு.
இல்லையென்றால், Guideline Value-இன் மூன்று மடங்கு தான்.
அதாவது, ஐந்து கோடி என்று பதிவு செய்திருந்தால் 15 கோடி கிடைக்கும். 10 லட்சம் என்று பதிவு செய்திருந்தால் முப்பது லட்சம் கிடைக்கும்.
நிலம் வாங்கும் விற்பனைக்குள் கருப்பு பணம் புழக்கம் இருப்பதால், பல பத்திரப்பதிவுகள், அரசு அறிவித்திருக்கும் Guideline Value-லேயே செய்யப்படுகின்றன. இதுதான், விவசாயிகள் கவலையுடன் பார்க்கும் முதன்மையான சிக்கல்.
Part - 4
தமிழகத்தின் பிற பகுதிகளில், தஞ்சாவூர், தேனி, மதுரை அருகே மேலூர் போன்ற இடங்களில்; இவ்வாறு நிலம் கையகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது, ‘இந்த திட்டம் வேண்டாம்’ என்றுபகுதி மக்கள் தெளிவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், அத்தகைய முழுமையான எதிர்ப்பு இல்லை என்பதை, நம்மால் உணர முடிகிறது.
கடந்த நாள் முத்தாலியில் நடைபெற்ற கூட்டத்தில், ‘நமது நிலம் நமதே – விவசாயிகள் சங்கம்’ தலைவர் குமார ரவிக்குமார் பேசிய போது,
விளைநிலங்களை மக்களின் அனுமதியின்றி கையகப்படுத்தக் கூடாது என்றும், உழவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் ஒப்புதலை பெற்றே நிலம் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஓசூர் ஆன்லைனிடம் பேசிய சில உழவர்கள், வழிகாட்டுதல் விலையல்ல, சந்தை விலையில் அரசு விலை அறிவித்தால் ஏற்புடையதாக இருக்கும் என்ற கருத்தையும் தெரிவித்தனர்.
இருப்பினும், பெரும்பாலான உழவர்கள் மனதில் ஒரே ஒரு அச்சம் தான். தங்கள் நிலம் போனால், வாழ்விடம் போகும். வாழ்வாதாரம் போகும்.
ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய முயற்சிக்கும் அரசுகள், இந்த ட்ரில்லியன் சொட்டு கண்ணீருக்கு ஒரு விடை சொல்லுமா?
இன்று, பதட்டத்தோடும்… கண்ணீரோடும்… காத்திருக்கின்றனர் மக்கள்.








