Hosur News, ஓசூர் செய்திகள் - ஒற்றை யானை தாக்கியதில் தேன்கனிக்கோட்டை அருகே பெண் பலி

தேன்கனிக்கோட்டை அருகே குண்டுகோட்டையை அடுத்துள்ள ஏணிபண்டா என்ற ஊரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி சின்னம்மா (வயது 39). இவர் தனக்கு உரிமையாக மாடுகள் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த நாள் சின்னம்மா மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து கொண்டு காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஒச அள்ளி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மாடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அப்போது அதில் ஒரு கன்றுக்குட்டி மட்டும் காணவில்லை. இதனால் தான் மாடு மேய்த்து கொண்டிருந்த இடத்திற்கு இருட்டிய பிறகு மீண்டும் சென்று கன்றுக்குட்டியை தேடி பார்த்துள்ளார்.

அப்போது ஒச அள்ளி முனியப்பன் கோவில் அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானையை கண்ட சின்னம்மா தப்பிப் பிழைப்பதற்காக உள்ளங்கால் பிடறீ அடிக்க ஓடியுள்ளார்.  அனாலும் அந்த ஒற்றை யானை சின்னம்மாவை தாக்கியுள்ளது. இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கன்றுக்குட்டியை தேடி கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்ற சின்னம்மா வீடு திரும்பாததால் உறவினர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர்.

அப்போது அங்கு முனியப்பன்கோவில் அருகே சின்னம்மா யானை தாக்கி இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அஞ்செட்டி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனவர் ரவி தலைமையில் வனவர்கள் நிகழ்விடத்திற்கு சென்று அந்த ஒற்றை யானையை விரட்டினர்.

இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவலர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து, யானை தாக்கி பலியான சின்னம்மாவின் உடலை கைப்பற்றி உடல் ஆய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவலர்கள் வழக்குபதிவு செய்து விணவி வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: