Hosur News, ஓசூர் செய்திகள் - மாவட்ட அளவிலான வாலிபால் விளையாட்டுப் போட்டியில், முதலிடம் பெற்று வெற்றி பெற்றதால், பழிதீர்க்கப்பட்டதா ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி?

ஓசூர் புனித ஜான் போஸ்கோ பள்ளி,  தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.  இந்தப் பள்ளி ஓசூரின் பல தலைமுறையினருக்கு கல்வி வழங்கி வருகிறது.
 
இன்று அரசியல் தலைவர்களாக மற்றும் பெரும்புள்ளிகளாக ஓசூரில் வலம் வரும் பலர், இந்த பள்ளியில் கல்வி மற்றும் ஒழுக்கம் பயின்றவர்களே!

மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை, அதாவது Pre KG முதல் பிளஸ் டூ வரை இங்கு பயிற்றுவிக்கப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளியில் கல்வி பயின்ற மாணவிகள், மாநில அளவிலான சிறந்த கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்வி பிரிவுகளில் சேர்ந்து, தங்களது வாழ்வில் வெற்றி பெறுகின்றனர்.

ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளியில், கல்வி மட்டும் அல்லாது, மாணவியருக்கு விளையாட்டு பயிற்சியிலும் முழு அளவில் ஊக்கமளிக்கப்படுகிறது.  அதனால், இந்த பள்ளி மாணவிகள் ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கோலோச்சி, முதலிடம் பிடித்து, ஓசூர் மற்றும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர்.

ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளியில் கல்வி, உடற்பயிற்சி மற்றும் ஒழுக்கம் என அனைத்தையும் ஒரு சேர கற்பிப்பதால், ஏழை எளிய, நடுத்தர மற்றும் செல்வந்தர்கள், என அனைத்து தரப்பினரும், தங்களது பெண் பிள்ளைகளை, இந்த பள்ளியில் சேர்க்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த சூழலில், கடந்த நாள், கிருஷ்ணகிரி மாவட்டம் அளவிலான வாலிபால் போட்டி, ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள, யோகி வேமனா என்கிற தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்கெடுத்த ஓசூர் ஜான்போஸ்கோ பள்ளி மாணவிகள், வழக்கம் போல சிறப்பாக விளையாடி, முதலிடத்தை தட்டிச் சென்றனர். விளையாட்டுப் போட்டியை நடத்திய யோகி வேமனா பள்ளி தோல்வி அடைந்தது.

விளையாட்டுப் போட்டி முடிந்த அன்றைய நாளில், யோகி வேமனா பள்ளி ஆசிரியை ஒருவர், குறிப்பிட்ட மாணவி தமது கைபேசியை திருடிக் கொண்டதாக கூறி, காதால் கேட்க முடியாத சொற்களைக் கொண்டு ஜான் போஸ்கோ பள்ளி மாணவி மற்றும் பயிற்சியாளரை கடுமையாக வஞ்சித்ததாக கூறப்படுகிறது.

பயிற்சி ஆசிரியர் மாணவியிடம் கேட்டபொழுது, கீழே கிடந்த தொலைபேசியை எடுத்து ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன் என கூறியுள்ளார்.  ஜான் போஸ்கோ பள்ளி ஆசிரியர் தம்மால் இயன்றவரை பணிந்து, யோகி வேமனா பள்ளி ஆசிரியையை அமைதி படுத்த முயன்றும், இயலாத சூழல் நிலவியதால், மாணவியின் தாயை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தகவலை தெரிவித்துள்ளார்.  மாணவியின் தாய், அறிவுறுத்தியதன் படி, மாணவி தண்டிக்கப்பட்டுள்ளார்.  ஆசிரியர் மாணவியை தண்டிப்பதை கண்ட அந்த ஆசிரியை மகிழ்வாக இடத்தை விட்டு நகர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓசூர் ஜான்போஸ்கோ பள்ளி விளையாட்டு பயிற்சியாளர் தியாகராஜன் தனது பள்ளி மாணவியை கண்டிக்கும் காட்சி, யோகி வேமனா பள்ளியின் CCTV காட்சி திரையிலிருந்து, Mobile Phone பயன்படுத்தி, காணொளியாக பதியப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.  

இந்த காணொளியை, பாலிமர் தொலைக்காட்சி உள்ளிட்ட சில ஊடகங்கள் பள்ளியின் பெயரை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்ட பொழுது, தோல்வியின் வேதனையால் பழி தீர்க்க, தனியார் பள்ளி காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டு இருக்குமோ என்கிற சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.
 
யோகி வேமனா பள்ளியின், பணியாளர் திரு மஞ்சுநாத் என்பவரை தொடர்பு கொண்டு ஓசூர் ஆன்லைன் சார்பில் கேட்ட பொழுது, தங்களது பள்ளி நிர்வாகம், CCTV காட்சியை வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்து கூறினார்.  பெற்றோர்களும், பொதுமக்களும், தன்னார்வலர்களும் வேமனா பள்ளி நிர்வாகத்தை கேட்கும் கேள்வி என்னவென்றால், CCTV காட்சியையே இவர்களால் பாதுகாப்பாக வைக்க இயலவில்லை என்றால், எப்படி மாணாக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்வர் என்பதாக இருக்கிறது!

கடந்த நாள், ஆசிரியர் மாணவியை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதால், காவல்துறை வழக்கு பதிந்து, விளையாட்டு பயிற்சி ஆசிரியரை கைது செய்தது.

இதற்கிடையே, மாணவியின் தாய், ஊடகங்களிடம் பேசும் பொழுது, தான் அறிவுறுத்தியதால்தான் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் தமது மகளை கண்டித்தார் என்றும், இதில் கைது நடவடிக்கை போன்ற சட்ட நடவடிக்கைகள் தேவை இல்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது விளக்கமான ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஒரு பள்ளி மற்றொரு பள்ளியை பழி தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும், பொதுமக்களும் தன்னார்வலர்களும் தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: