ஒசூரில் சாலையில் நாத்து நட்டு போராட்டம் நடத்திய மக்களால் பரபரப்பு, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. ஒசூர் மாநகராட்சி, 27 வது பகுதிக்கு உட்பட்ட சிவானந்தா நகர் பகுதியில், 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அலசநத்தம், வெங்கடேஷ் நகர் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சிவானந்தா நகர் பகுதி குடியிருப்பில் தேங்கி நிற்கிறது. லேசான மழை பொழிந்தாலே கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் பெருக்கெடுப்பதால் அப்பகுதி மக்கள் கொசுக்கடி மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, பாதிப்படைகின்றனர்.
பலமுறை மாநகராட்சி அலுவலர்களை சந்தித்து மனு அளித்தும், கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்கவில்லை எனக்குற்றம் சாட்டிய மக்கள், கடந்த நாள் மாலை, ஓசூர் மாநகராட்சியை கண்டித்து, சாலையில் பொதுமக்கள் நாத்து நட்டு தங்களை எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அட்கோ காவல் நிலைய, காவல்துறையினர், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிட வைத்தனர்.








