Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் மற்றொரு பி ஆர் பி? 25,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதா?

ஓசூரில் மற்றொரு பி ஆர் பி?  இருபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதா?  ஓசூரில் நடைபெற்ற இந்த மோசடி குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு அனைத்திந்திய காங்கிரஸ் செயலாளர் கொண்டு சென்றதன் பின்னணி என்ன?  இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும், கிருஷ்ணகிரி மாவட்ட கிரஷர் உரிமையாளர்களின் பதில் குறித்த ஒரு பார்வை!

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கிரானைட் கற்களுக்கு உலகம் முழுவதும் புகழ் பெற்றது.  இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கன அடி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன.  கிரானைட் தொழிலை நம்பி, ஏராளமான வடநாட்டினர் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொழில் புரிந்து வருகின்றனர்.  கிரானைட் மட்டுமல்லாது, பெங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, ப்ளூ மெட்டல் என்று அழைக்கப்படும், ஜல்லி கற்களை, கிரஷர் குவாரிகள் மூலம், நாளொன்றுக்கு பல ஆயிரம் லாரிகளில் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் குவாரிகளில், இருபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அகில இந்திய காங்கிரஸ் செயலரும், முன்னாள் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் செல்லகுமார், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக, செய்தித்தாள்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக, ஓசூரில் கிருஷ்ணகிரி மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அதன் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது.

செய்தியாளர்களிடம் பேசிய கிரஷர் உரிமையாளர் சங்க தலைவர் சம்பங்கி கூறுகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுரங்கத் துறை உள்ளிட்ட அரசு துறைகளிடம் இருந்து முறையான அனுமதி பெற்று குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் மொத்தமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அபாண்டமான பொய்யை கூறுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மொத்தம் உள்ள 318 குவாரிகளில், தற்பொழுது 37 கிரானைட் குவாரிகளும் 66 கல் குவாரிகளும் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. ஆனால் மாவட்டத்தில் 174 குவாரிகள் முறைகேடாக செயல்படுவதாக அவர் அபாண்டமாக பொய் கூறி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, என தெரிவித்தார்!

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: